கிருஷ்ணகிரி அருகே அதிர்ச்சி: பாறை புதரில் 10 அடி நீளம் கொண்ட 6 மலைப் பாம்புகள் மீட்பு! 

By எஸ்.கே.ரமேஷ்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே சௌட்டஹள்ளி கிராமத்தில் பாறையின் கீழ் புதரில் இருந்த 10 அடி நீளம் கொண்ட 6 மலைப்பாம்புகளை மீட்ட தீயணைப்புத் துறையினர், வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

கிருஷ்ணகிரி, ராயக்கோட்டை, அஞ்செட்டி, ஊடேதூர்கம், சிங்காரப்பேட்டை, தொகரப்பள்ளி, ஒசூர், ஜவளகிரி ஆகிய வனச் சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரங்களுக்கு உட்பட்ட வனப்பகுதிகளில் யானை, சிறுத்தைப்புலி, கடமான், புள்ளிமான், காட்டுபன்றி, மயில், உடும்பு, கீரிபிள்ளை மற்றும் ஏராளமான எண்ணிக்கையில் மலைப்பாம்புகள் உள்ளன. குறிப்பாக கிருஷ்ணகிரி வனச்சரகத்தில் மலைப்பாம்புகள் அதிக அளவில் உள்ளது.

கிருஷ்ணகிரி, பர்கூர், போச்சம்பள்ளி, அரசம்பட்டி, பாரூர், காவேரிப்பட்டிணம் உள்ளிட்ட 16 காப்பு காடுகளிலிருந்து அண்மை காலமாக மலைப்பாம்புகள் கிராம பகுதிகளுக்கும், விவசாய நிலங்களிலும் அதிக அளவில் படையெடுத்து வருகின்றனர். இந்நிலையில், கிருஷ்ணகிரி அருகே உள்ள சௌட்டஹள்ளி அருகே தென்பெண்ணை ஆற்றின் ஓட்டியுள்ள ஈஸ்வரன் கோயில் பகுதிகளில் உள்ள பாறையின் கீழ் மலைப்பாம்பு ஒன்று உள்ளதாக இன்று (20ம் தேதி) தீயணைப்புத்துறையினருக்கு கிராம மக்கள் தகவல் அளித்தனர்.

தொடர்ந்து, மாவட்ட தீயணைப்பு அலுவலர் வேலு உத்தரவின் பேரில், தீயணைப்பு அலுவலர் சக்திவேல் தலைமையில் ஹரிஹரன், ராஜலிங்கம், பசுபதி ஆகியோர் நிகழ்விடத்திற்கு சென்றனர். அங்கு பாறையின் கீழ் புதரில் 6 மலைப்பாம்புகள் இருந்ததை கண்டு தீயணைப்புத்துறையினர் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர், 10 அடி நீளமுள்ள 6 மலைப்பாம்புகளை பாதுகாப்பாக பிடித்து, கிருஷ்ணகிரி வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து கிருஷ்ணகிரி வனச்சரக அலுவலர் முனியப்பன் கூறும்போது, ''செளட்டஹள்ளி கிராமத்தில் பிடிக்க தீயணைப்புத் துறையினரால் பிடிக்கப்பட்ட 6 மலைப்பாம்புகளும், பாதுகாப்பாக அடர்ந்த வனப்பகுதிகள் விடப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி வனச்சரகத்தில், மலைப்பாம்புகள் மட்டுமின்றி கொடிய விஷமுடைய நாகப்பாம்புகள், கண்ணாடி விரியன், கட்டுவிரியன், சுருட்டை விரியன், சாரை, கொம்பேரி மூக்கன் உள்ளிட்ட பல்வேறு வகையான பாம்புகள் உள்ளன. பாம்புகள் ஊருக்குள் புகுந்தால் எந்த விதமான தொந்தரவும் செய்யாமல் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்,'' என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE