செங்கல்பட்டில் 36 இடங்களில் மலிவு விலை மருந்தகம்: முதல்வர் தொடங்கி வைக்கிறார்

By பெ.ஜேம்ஸ் குமார்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் 36 இடங்களில் முதல்வர் மலிவு விலை மருந்தகத்தை வரும் 24-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியம் ஆத்தூர் பகுதியில் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையின் மாவட்ட மருத்துவ சேமிப்பு கிடங்கு அமைக்கப்பட்டு வருகிறது. முதல்வர் மருந்தகங்களை தமிழக முதல்வர் ஸ்டாலின் வரும் 24-ம் தேதி தொடங்கி வைக்க உள்ள நிலையில் கட்டமைப்பு பணிகள் குறித்து செங்கல்பட்டு மாவட்ட கண்காணிப்பு அலுவலரும் சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்ற இயக்குநருமான ஏ.ஆர். ராகுல்நாத், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ச.அருண்ராஜ் ஆகியோர் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வின் போது கூடுதல் ஆட்சியர் நாராயண சர்மா, பயிற்சி ஆட்சியர் மாலதி ஹெலன், மாவட்ட வருவாய் அலுவலர் சே.ஹா.சேக் முகையதீன், கூட்டுறவு சங்க இணை பதிவாளர் நந்தகுமார் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர். இது குறித்து அதிகாரிகள் கூறியது: ஏழை, எளிய நடுத்தர மக்கள் மற்றும் கிராமப்பகுதி மக்களுக்கு குறைந்த விலையில் தரமான மருந்துகள் வழங்க "முதல்வர் மருந்தகம்" கடைகள் தமிழ்நாடு முழுவதும் 1000 இடங்களில் வரும் 24-ம் தேதி முதல்வர் மருந்தகம் திறக்கப்பட இருக்கிறது.

அதன்படி செங்கல்பட்டு மாவட்டத்தில் முதல்கட்டமாக அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் என 36 இடங்களில் முதல்வர் மருந்தகம் தொடங்கப்பட உள்ளது. அதற்காக பணிகள் நடைபெற்று வருகிறது. மருந்துகள் 20 முதல் 70% வரை தள்ளுபடி விலையில் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது. பொதுமக்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவித்தார். தற்போது நாடு முழுவதும் பிரதமர் மக்கள் மருந்தகம் என்ற பெயரில் மருந்தகங்கள் செயல்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE