புதுச்சேரி: காரைக்காலில் பாதிக்கப்பட்ட மீனவ சமூகத்தினரை நேரில் சந்தித்து முதல்வர் ரங்கசாமி பேச வேண்டும். அத்தோடு மத்திய அமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்த வேண்டும் என்று மாநில காங்கிரஸ் தலைவரும் எம்பியுமான வைத்திலிங்கம் வலியுறுத்தியுள்ளார்.
காங்கிரஸ் அலுவலகத்தில் நிர்வாகிகள் கருத்து கேட்கும் கூட்டத்தை நடத்தி வரும் எம்.பி வைத்திலிங்கம் கூறியதாவது: கடந்த மாதம் 27-ஆம் தேதி காரைக்கால் மற்றும் தமிழகப் பகுதியை சார்ந்த 17 மீனவர்களை இலங்கை கடற்படையினர் அத்து மீறி தாக்குதல் நடத்தி அவர்களை கைது செய்து இலங்கைக்கு கொண்டு சென்றார்கள். அதன் பின்னர், அந்த மீனவர்கள் இலங்கைச் சிறையில் அடைக்கப்பட்டனர்.
அந்த மீனவர்களை விடுவிக்க கோரி நானும், முன்னாள் முதல்வர் நாராயணசாமியும் மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சரை நேரில் சந்தித்து சிறையில் அடைக்கபட்டுள்ள புதுச்சேரி மற்றும் தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம். அவரும் அதற்குண்டான நடவடிக்கைகளை எடுப்பதாக உறுதி அளித்து இருந்தார்கள்.
இதற்கிடையில், காரைக்கால் பகுதியை சார்ந்த மீனவ சமுதாயத்தினர் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றார்கள். தமிழகப் பகுதியிலே போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மீனவர்களை அழைத்து தமிழக முதல்வர் மீனவர்களிடம் அவர்களுக்கு உண்டான அனைத்து உதவிகளை செய்வதாக உறுதியளித்து அவர்களுடைய போராட்டத்தை விளக்கிக் கொள்ள கேட்டுக் கொண்டார்கள்.
» ஆவடி அருகே குடும்ப பிரச்சினையால் மனைவி கொலை: கணவன் தற்கொலை முயற்சி
» கன்னியாகுமரி கண்ணாடி இழைப் பாலம்: இதுவரை 3.39 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர்!
அதுபோல, புதுச்சேரி மாநில முதல்வர் ரங்கசாமியும் காரைக்கால் பிராந்தியத்தில் பாதிக்கப்பட்ட மீனவ சமுதாயத்தினரை நேரில் சந்தித்து அவர்களிடம் பேச வேண்டும். மேலும் மத்திய அரசை அணுகி தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்து, அதோடு மட்டும் இல்லாமல் மத்திய அமைச்சரை நேரில் சந்தித்து மீண்டும் வலியுறுத்த வேண்டும்.இந்த இக்கட்டான தருணத்தில் நமது காரைக்கால் பகுதியை சார்ந்த மீனவர்கள் அமைதி காக்க வேண்டும் என்றார்.