உதகை, குன்னூரில் காட்டுத்தீ செடிகள், மரங்கள் கருகின: வனத்துறை முக்கிய எச்சரிக்கை

By KU BUREAU

நீலகிரி: உதகை மற்றும் குன்னூரில் காட்டுத்தீ ஏற்பட்டதால் பல ஏக்கரில் காடுகள் எரிந்து நாசமானது.

நீலகிரி மாவட்டத்தில் வழக்கமான குளிர் காலநிலை மாறி, தற்போது பகல் நேரங்களில் அதிக வெப்பம் நிலவுகிறது. வனப்பகுதியில் மரங்கள் காயத் தொடங்கிவிட்டன. காட்டுத் தீ ஏற்படாமல் இருக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வனத்துறையினர் கொண்டாலும் ஒரு சில இடங்களில் வன பகுதிகளில் காட்டுத்தீ பரவுவதை தடுக்க முடியவில்லை. உதகை மார்லிமந்து அணையை ஒட்டியுள்ள உதகை நகராட்சிக்கு சொந்தமான வனப்பகுதியில் திடீரென காட்டுத்தீ பரவியது.

அணையை ஒட்டிய பகுதியில் புகை மண்டலமாக காட்சியளித்தது. அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள், வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். உதகை வனச்சரகத்தை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட ஊழியர்கள், அங்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 2 மணி நேரத்துக்கும் மேல் எரிந்த காட்டுத் தீயால் சுமார் 5 ஏக்கரில் இருந்த முட்செடிகள் புற்கள் சாம்பலாகின.

இதேபோல குன்னூரில் இருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கீழஒடயரட்டி கிராமத்தில் காட்டுத் தீ ஏற்பட்டு, அருகே உள்ள தனியார் தேயிலைத் தோட்டங்களுக்கும் பரவியது. தகவலின் பேரில் குன்னூர் தீயணைப்பு நிலைய அலுவலர் குமார் தலைமையில், 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

எனினும், நூற்றுக்கணக்கான மரங்களும், செடிகளும் கருகின. வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் வனப்பகுதி அருகே தீயை மூட்ட வேண்டாம் எனவும், மீறி செயல்படுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமென வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE