திருப்பரங்குன்றம் கோயிலில் எல்.முருகனுக்கு அனுமதி மறுப்பு: டிஜிபிக்கு அண்ணாமலை கடிதம்

By KU BUREAU

திருப்பரங்குன்றம் கோயிலில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகனுக்கு அனுமதி மறுத்து போலீஸார் தங்கள் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியுள்ளதாக டிஜிபிக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக கடிதத்தில் அண்ணாமலை தெரிவித்துள்ளதாவது: கடந்த 17-ம் தேதி திருப்பரங்குன்றம் கோயிலுக்கு வந்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகனை, கோயிலுக்கு செல்லவிடாமல் தடுக்கும் முயற்சியில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் ஈடுபட்டனர். இதன்மூலம், அவர்கள் இந்த விவகாரத்தை தவறாக கையாண்டதை தங்கள் கவனத்துக்கு கொண்டுவர விரும்புகிறேன்.

திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயில் மற்றும் காசி விஸ்வநாதர் கோயிலுக்கு வருகை தருவது உட்பட, அமைச்சரின் பயணத் திட்டம் தொடர்பாக தமிழக காவல் துறையின் முன்அனுமதி பெற்றிருந்த போதிலும், கோயிலின் நுழைவுவாயிலில் நிறுத்தப்பட்டிருந்த போலீஸாரால் அமைச்சர் தடுக்கப்பட்டது வருத்தமளிக்கிறது.

இதுபற்றி அதிகாரிகளிடம் அமைச்சர் கேட்டதற்கு, ‘‘​கோயிலுக்கு செல்ல அனுமதிக்க கூடாது என்று உயர் அதிகாரிகளிடம் இருந்து உத்தரவு வந்துள்ளது’’ என அதிகாரிகள் தெரிவித்தது கூடுதல் வருத்தத்தை அளிக்கிறது.

ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் பாதுகாப்புக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில், அவர் விரும்பும் இடத்தில் வழிபடும் உரிமையை பறிப்பதன் மூலம் போலீஸார் தங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளனர்.

இதுவரை இல்லாத அளவுக்கு சமீபகாலமாக தமிழகத்தில் பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உருவாகி உள்ள சூழலில், இந்த சம்பவம் பொதுமக்களிடம் கடும் சந்தேகத்தை எழுப்புகிறது. நாடாளுமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும் உள்ள ஒருவரே இப்படி அவமானப்படுத்தப்பட்டால், நமது மாநிலத்தில் சாதாரண மக்களின் நிலை என்ன? இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE