மதுரை: திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் ஆட்சியரிடம் தவறான தகவல்களை தெரிவித்த காங்கிரஸ், அதிமுக உள்ளிட்ட கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாஜகவினர் புகார் மனு அளித்தனர்.
மதுரை மாநகர மாவட்ட பாஜக தலைவர் மாரி சக்ரவர்த்தி ஆலோசனையின் பேரில் பாஜக வழக்கறிஞர் முத்துக்குமார் தலைமையில் பாஜக நிர்வாகிகள் மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதனிடம் இன்று புகார் ஒன்றை அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது: திருப்பரங்குன்றம் பள்ளிவாசல் ஜமாத்தார்கள் திருப்பரங்குன்றம் மலையை திருப்பரங்குன்றம் மலைதான் என, ஒத்துக்கொண்டு போர்டு வைத்துள்ளனர். சில சமூக விரோதிகள் இம்மலையை சிக்கந்தர் மலை என பெயரிட்டு கூகுள் மேப், காலண்டர், சமூக ஊடகங்களில் தொடர் பொய் செய்திகளைப் பரப்புகின்றனர்.
திருப்பரங்குன்றம் பகுதி அதிமுக நிர்வாகி கவிஞர் மோகன்தாஸ், காங்கிரஸ் கட்சியின் மகேந்திரன், கம்யூனிஸ்ட் கட்சியின் ராஜேந்திரன், மதிமுக கட்சி பாண்டியன், விசிக-வின் முத்து மணிகண்டன், தேமுதிகவின் நெடுமாறன், திருவண்ணாமலை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சண்முகநாதன் , இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மகாமுனி , மனிதநேய மக்கள் கட்சி, இந்திய முஸ்லிம் லீக் கட்சியில் இருந்து நிர்வாகிகள் சிலர் மதுரை ஆட்சியரை கடந்த 27-ம் தேதி சந்தித்துள்ளனர்.
அவர்கள் கொடுத்த மனுவில், திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள சிக்கந்தர் தர்காவில் காலங்காலமாக மனநலம் பாதித்தவர்களை தங்கவைத்து பராமரிப்பதாக பொய்யான தகவல்களை கூறியுள்ளனர். மனநல மருத்துவ சட்டப்படி, திருப்பரங்குன்றம் மலையில் மனநலம் பாதித்தவர்களை தங்க வைக்க முடியாது. மேலும், மலை மேல் ஆடு, கோழிகளை வெட்டி கந்தூரி கொடுப்பதாக பொய் தகவல்களை தெரிவித்துள்ளனர்.
» ராமநாதபுரம் சமூக ஆர்வலர் ஜான் பிரிட்டோ தாயார் மீது கொலைவெறித் தாக்குதல்: சீமான் கண்டனம்
» உடுமலையில் சாலை விபத்து; சிவகங்கையை சேர்ந்த 2 பேர் உயிரிழப்பு
இதற்கான ஆதாரங்கள் எதுவும் ஆட்சியரிடம் கொடுக்கவில்லை. மலை மேல் சென்று அசைவ உணவை சாப்பிட்ட ஒருவர் தான் அனைத்து கட்சி நிர்வாகிகளையும் அழைத்துச் சென்று ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளார். திருப்பரங்குன்றம் மலை மேல் சென்று வர ஆட்சியரிடம் அனுமதியும் அவர்கள் கேட்டுள்ளனர். இவர்களின் கடிதத்தின் பேரிலேயே ஆர்.டி.ஓ தலைமையில் அமைதிக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. பொய் தகவல்களை கூறி கையெழுத்திட்ட சிலர், அமைதிக் கூட்டத்தின் தீர்மானத்தில் கையெழுத்து போடவில்லை. ஆட்சியர் வெளியிட்ட அறிக்கையில் பாஜக தலைவர்கள் மத மோதல்களை உருவாக்கியதாக எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை. எனவே, இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும், என்று அதில் கூறப்பட்டுள்ளது.