உடுமலையில் சாலை விபத்து; சிவகங்கையை சேர்ந்த 2 பேர் உயிரிழப்பு

By எம்.நாகராஜன்

உடுமலை: உடுமலையில் நிகழ்ந்த சாலை விபத்தில் சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையைச் சேர்ந்த 2 பேர் உயிரிழந்தனர்.

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை, உரத்தூரைச் சேர்ந்தவர் மருதுபாண்டியன் (35). அதே ஊரை சேர்ந்த பிரபாகரன் (39), அவரது மனைவி சிலம்பரசி (33), இவர்களது மகன் நேத்ரன் (3) ஆகிய 4 பேரும் ஒரு காரில் பழநிக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டு உடுமலை அருகே உள்ள குறிஞ்சேரி கிராமத்தை ஒட்டிய 4 வழிச் சாலை வழியாக சென்றனர்.

காரை பிரபாகரன் ஓட்டிச் சென்றார். அப்போது இவர்கள் சென்ற காரை மற்றொரு கார் முந்தி சென்றது. அப்போது முந்தி சென்ற காரின் மீது இடித்து விடாமல் தவிர்க்கும் வகையில் இடதுபுறமாக திருப்பியுள்ளார். அப்போது சாலையோரம் வைக்கப்பட்டிருந்த கான்கிரீட் டிவைடர் மீது கார் மோதியது. இதில் காரின் முன் பகுதி நொறுங்கியது. காரின் உள்ளே இருந்தவர்களுக்கு தலை, மார்பு பகுதி என பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் உதவியுடன் உடுமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இதில் மருதுபாண்டியன், சிலம்பரசி ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். பிரபாகரனும் அவரது 3 வயது மகனும் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து உடுமலை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE