செங்கல்பட்டு: செங்கல்பட்டு நகராட்சியில் அமைந்துள்ள அம்மா உணவகத்தை மூடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து அதிமுக நகர செயலாளர் வி.ஆர்.செந்தில்குமார் தலைமையில் நகர மன்ற அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் இன்று காலை நடைபெற்றது.
செங்கல்பட்டு நகராட்சிக்கு உட்பட்ட அரசு பொது மருத்துவமனையில் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் உணவு அருந்தி வருகின்றனர். இந்நிலையில் அம்மா உணவகத்தை மூடும் நடவடிக்கையாக கடந்த ஓராண்டாக அம்மா உணவகத்தில் அப்பகுதியைச் சேர்ந்த திமுக நகர மன்ற உறுப்பினர் மற்றும் திமுகவினர் முறைகேடாக நிர்வாகம் செய்து வருகின்றனர். மேலும் ஓர் ஆண்டுகளாக முறையான கணக்குகள் பராமரிக்கப்படாமல் உள்ளது.
இதனால் நிர்வாக ரீதியாக செயல்பட முடியாத நிலை உருவாகியுள்ளது. இதனை கண்டிக்கும் வகையில் செங்கல்பட்டு நகர அதிமுக செயலாளர் வி.ஆர்.செந்தில்குமார் தலைமையில் செங்கல்பட்டு நகராட்சி அலுவலகம் முன்பு நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
» காளையார்கோவில் அருகே சட்டவிரோத மின் வேலியில் சிக்கி இளைஞர் உயிரிழப்பு: விவசாயி கைது
» கோவையில் மத்திய அரசு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் சீண்டல்: ஓவிய ஆசிரியர் கைது
கடந்த சில மாதங்களுக்கு முன்பு சட்டப்பேரவை குழு செங்கல்பட்டு அம்மா உணவகத்தை ஆய்வு செய்தபோது அங்கு முறையாக பராமரிக்கப்படவில்லை எனக் கூறி விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்தும் நகராட்சி நிர்வாகம் இதனை முறையாக பராமரிக்காமல் அம்மா உணவகத்தை முடக்கும் நோக்கிலேயே செயல்படுகின்றனர் என அதிமுகவுடன் குற்றச்சாட்டுகின்றனர்.
இதனையடுத்து நகராட்சித் தலைவர் தேன்மொழி அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இனிமேல் இதுபோன்ற தவறுகள் நடக்காது. உரிய முறையில் உணவகம் பராமரிக்கப்படும். வெளிநபர்கள் தலையிடாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதையடுத்து புகார் அளித்துவிட்டு அதிமுகவினர் கலைந்தனர். பேச்சுவார்த்தையில் தெரிவித்தது போல் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனில் மிகப்பெரிய அளவில் போராட்டத்தை நடத்த நாங்கள் தயாராக இருக்கிறோம் என அதிமுகவின் தெரிவித்தனர்.