தமிழக கல்வி நிலையங்களில் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை அதிகரிப்பு: வேல்முருகன் கவலை

By KU BUREAU

சென்னை: கோவையில் 17 வயது சிறுமியை கல்லூரி மாணவர்கள் 7 பேர் கும்பல் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தமிழ்நாட்டையே பேரதிர்ச்சிக்குள்ளாகி உள்ளது என தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "தமிழ்நாட்டில் சமீப காலமாக சிறுமிகள், பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருவது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. பணி செய்யும் இடங்களில் அதிகரித்து வந்த பாலியல் வன்கொடுமைகள், சமீப காலமாக பள்ளி மற்றும் கல்லூரிகளில் அரங்கேறி வருவது, அறிவார்ந்த தமிழ் சமூகத்தை தலைகுனிவை ஏற்படுத்தியிருக்கிறது.

பள்ளி குழந்தைகளுக்கு வழிகாட்டியாக இருக்கக் கூடிய ஆசிரியர்கள், கல்வி கற்கும் மாணவிகளை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்துவதும், கல்வி போதிக்கும் பெண் ஆசிரியர்கள், பேராசிரியர்களுக்கு, மாணவர்கள் பாலியல் ரீதியாக சிக்கலை ஏற்படுத்தும் கவலையும், அதிர்ச்சியும் அளிக்கிறது. இப்படி நாள்தோறும் அரங்கேறி வரும் பாலியல் ரீதியாக சிக்கலின் தொடர்ச்சியாக, கோவையில் 17 வயது சிறுமியை கல்லூரி மாணவர்கள் 7 பேர் கும்பல் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தமிழ்நாட்டையே பேரதிர்ச்சிக்குள்ளாகி உள்ளது.

அதாவது, நன்றாக கற்று நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக விளங்க வேண்டிய எதிர்கால தலைமுறை, போதைப் பொருட்களாலும், பாலியல் சிக்கலாலும், இப்படி சீரழிந்து போவதை நினைத்து பார்க்கும் போது நெஞ்சு பதை பதைக்கிறது. இவ்விவகாரத்தில் கல்லூரி மாணவர்கள் 7 பேர் மீதும் போக்சோ வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

எனவே, உடனடியாக வழக்கை விசாரித்து குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கிட காவல்துறை உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உரிய சிகிச்சை அளித்து, பாதுகாப்பை உத்தரவாதப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறுமி மீண்டும் கல்வி கற்பதற்கும் தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுப்பதோடு, நிவாரணத் தொகை வழங்க வேண்டும்.

தமிழ்நாட்டில் கல்வி நிலையங்களில் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை அதிகரித்து வரும் நிலையில், குழந்தைகள் நல ஆணையத் திற்கு தலைவரை நியமித்து செயல்படுத்த வேண்டும். பள்ளி மற்றும் கல்லூரிகளில் கண்காணிப்புக்குழுவின் செயல்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக் கொள்கிறது" என்று வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE