கந்துவட்டி கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: திருப்பத்தூர் ஆட்சியரிடம் இளம்பெண் புகார்

By KU BUREAU

திருப்பத்தூர்: ரூ.40 ஆயிரம் கடனுக்காக பல லட்சம் மதிப்பிலான வீட்டை எழுதி தராவிட்டால் துப்பாக்கியால் சுட்டு கொன்று விடுவோம் என மிரட்டும் கந்துவட்டி கும்பலிடம் இருந்து காப்பாற்ற வேண்டும் என இளம்பெண், ஆட்சியரிடம் மனு அளித்த சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியது.

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் திங்கள்கிழமை தோறும் நடைபெறும் மக்கள் குறை தீர்வு கூட்டம் ஆட்சியர் சிவ செளந்திரவல்லி தலைமையில் நேற்று நடைபெற்றது. மாவட்டம் முழுவதிலும் இருந்து வந்திருந்த பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 400 பொது நலமனுக்களை ஆட்சியர் சிவசெளந்திரவல்லி உள்ளிட்ட அரசு அதிகாரிகளிடம் வழங்கினர். அதில், தகுதி வாய்ந்த மனுக்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.

நாட்றம்பள்ளி வட்டத்தைச் சேர்ந்த ஜெகதா என்பவர் அளித்த மனுவில், ”எனது சகோதரர் தங்கவேலு கடந்த 2020-ம் ஆண்டு வேலைக்காக மலேசியா சென்றார். அவர் வெளிநாடு சென்ற பிறகு தினசரி எங்களிடம் தொலைபேசி மூலம் பேசி வந்தார். கடைசியாக கடந்த 2021-ம் ஆண்டு தொலைபேசியில் பேசிய தங்கவேலு அதன் பிறகு இதுவரை எங்களிடம் பேசவில்லை. கடந்த 4 ஆண்டுகளாக அவர் குறித்த எந்த ஒரு தகவலும் எங்களுக்கு கிடைக்கவில்லை. தற்போது அவர் உயிரோடு இருக்கிறாரா ? இல்லையா ? என்பது கூட எங்களுக்கு தெரியவில்லை. எனவே, தங்கவேலு குறித்து எங்களுக்கு முழு தகவல் கிடைக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.

ஆம்பூர் வட்டம் சாண்றோர்குப்பம் கண்ணதாசன் நகர் மற்றும் திருப்பத்தூர் அடுத்த புதுப்பேட்டை ரோடு, 7-வது தெருவைச் சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், ‘‘ எங்கள் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்நிலையில், குடியிருப்பு பகுதிக்கு மத்தியில் தனியார் நிறுவனம் சார்பில் செல்போன் டவர் அமைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதற்கு, நாங்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம். ஆனாலும், குடியிருப்பு பகுதிக்கு மத்தியில் செல்போன் டவர் அமைப்பதற்கான பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. செல்போன் டவர் குடியிருப்பு பகுதியில் அமைக்கப்பட்டால் அதன் மூலம் வெளியாகும் கதிர்வீச்சால் மனிதர்கள் மட்டுமின்றி கால்நடைகள், பறவைகள் பாதிக்கப்படும் என்பதால் செல்போன் டவர் அமைக்க தடை விதிக்க வேண்டும். அதற்கான அனுமதியை ரத்து செய்ய வேண்டும்’’ என தெரிவித்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ராஜாபாளையம் பகுதியைச் சேர்ந்த குப்பன் மனைவி ஜெயவாணி என்பவர் அளித்த மனுவில், ‘‘எனது கணவர் குப்பன் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு உயிரிழந்து விட்டார். அவர் உயிரோடு இருந்தபோது அதே பகுதியைச் சேர்ந்த மஞ்சுளா மகேந்திரன் என்பவரிடம் ரூ.40 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார். அந்த கடனை அவர் திருப்பி தராததால் நான் அதை திருப்பி வழங்கிவிட்டேன். இந்நிலையில், எனது கணவர் உயிரிழந்த பிறகு, கொடுத்த கடனுக்கு வட்டி ரூ.10 லட்சம் ஆகிவிட்டது. ஆகவே, வட்டி பணத்தை கேட்டு மஞ்சுளா மகேந்திரன் என்னையும், எனது மகள்கள், மகனை மிரட்டி வருகிறார்.

ரூ.40 ஆயிரம் கடனுக்கான வட்டியை தராவிட்டால் எனக்கு சொந்தமான பல லட்சம் மதிப்பிலான எனது வீட்டை எழுதி கொடுக்கும்படியும், அப்படி செய்யாவிட்டால் அவரது மகன் மதிவாணன் என்பவர் இந்திய ராணுவத்தில் பணியாற்றி வருவதாகவும், அவர் விடுமுறையில் வந்தவுடன் அவரிடம் உள்ள துப்பாக்கியால் என்னையும், எனது குழந்தைகளையும் சுட்டுக்கொலை செய்துவிடுவோம் என மிரட்டி வருகிறார். இது குறித்து குரிசிலாப்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே, கந்துவட்டி கும்பலிடம் இருந்து என்னையும், எனது குழந்தைகளையும் பாதுகாக்க வேண்டும். கந்துவட்டி கேட்டு மிரட்டும் மஞ்சுளாமகேந்திரன் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.

இக்கூட்டத்தில், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் சதீஷ்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) செல்வம் உட்பட அனைத்து துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE