நெல்லை பொருநை அருங்காட்சியகம் திறப்பு எப்போது? - அமைச்சர் எ.வ.வேலு தகவல்

By KU BUREAU

திருநெல்வேலி: ரெட்டியார்பட்டியில் பொருநை அருங்காட்சியகம் அமைக்கும் பணி வரும் ஏப்ரல் மாதத்துக்குள் நிறைவடையும் என்று மாநில பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ. வேலு தெரிவித்தார்.

பொருநை அருங்காட்சியகம் அமைக்கும் பணிகளை ஆய்வு செய்தபின் அமைச்சர் கூறியதாவது: தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து தமிழர்களுடைய அடையாளங்கள் உலகுக்கு தெரிய வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு முன்னெடுப்பு முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. அதன்படி, கீழடியில் தமிழர்களுடைய வரலாற்று அடையாளங்கள் காட்சிப்படுத்தப் பட்டுள்ளன.

திருநெல்வேலி மாவட்டத்தில் பொருநை அருங்காட்சியகம் கட்டுவது தொடர்பாக 2021-ம் ஆண்டு சட்டப் பேரவையில் தமிழக முதல்வர் அறிவிப்பு வெளியிட்டார். அதை தொடர்ந்து, தமிழகத்தின் தொன்மையான வரலாற்றை உலகறியச் செய்யும் பொருட்டு கொற்கை, ஆதிச்சநல்லூர், சிவகளை ஆகிய இடங்களில் கிடைத்த தொல்பொருட்களை காட்சிப்படுத்திட திருநெல்வேலி மாவட்டம் குலவணிகர்புரம் கிராமம் ரெட்டியார் பட்டி பகுதியில் அருங்காட்சியகம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதற்காக கடந்த 2023-ம் ஆண்டு மே 18-ம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டது. பொதுப்பணித்துறை சார்பில் ரூ.56.36 கோடி திட்ட மதிப்பீடு தயாரித்து, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 13 ஏக்கர் நிலத்தில், 54 ஆயிரம் சதுர அடியில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. ஆதிச்சநல்லூர் தொகுதி ஏ மற்றும் பி கட்டிடம் 16,486 சதுர அடியிலும், சிவகளை தொகுதி கட்டிடம் 8,991 சதுர அடியிலும், கொற்கை தொகுதி ஏ மற்றும் பி கட்டிடம் 17,429 சதுர அடியிலும் தரைதளம் மற்றும் முதல் தளத்துடன் கட்டப்படுகிறது.

மேலும், அறிமுக காட்சி கட்டிடம், கைவினை பொருட்கள் பணிமனை, ஒப்பனை அறைகள் ஆகியவையும் கட்டப்பட்டு வருகிறது. மேலும், ஒவ்வொரு கட்டிடத்துக்கும் இணைப்புச் சாலை அமைக்கவும், அழகு நிறைந்த குளம், குளத்தின் மீது பாலம் அமைக்கவும், சுற்றுச்சுவர், பூங்காக்கள், வண்ண விளக்குகள், நீரூற்று, சுற்றுச்சூழல் திறந்தவெளி திரையரங்கு போன்ற பல்வேறு பணிகள் மக்களை கவரும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதுவரை 75 சதவீதம் பணிகள் முடிவடைந்துள்ளன. அனைத்து பணிகளையும் வரும் ஏப்ரல் மாதம் 30-ம் தேதிக்குள் முடிக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. துறைசார்ந்த அலுவலர்கள் ஒத்துழைப்புடன் பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். இவ்வாறு தெரிவித்தார்.

பொதுப்பணித்துறை அரசு செயலாளர் ஜெ. ஜெயகாந்தன், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அரசு செயலாளர் இரா. செல்வராஜ், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஆர். சுகுமார், பொதுப்பணித்துறை முதன்மை தலைமைப் பொறியாளர் எஸ்.மணிவண்ணன், அப்துல்வகாப் எம்எல்ஏ., மாநகராட்சி ஆணையர் சுகபுத்ரா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE