சென்னை: தமிழகத்தில் நடைபெறும் பாலியல் சீண்டல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றால் பழனிசாமி தலைமையில் அதிமுக ஆட்சிக்கு வர வேண்டும் என்று சென்னையில் நேற்று நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சரும் அதிமுக மகளிரணி செயலாளருமான பா.வளர்மதி தெரிவித்தார்.
தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் சிறுமிகளுக்கு எதிராக நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகளை கட்டுப்படுத்தத் தவறிய திமுக அரசைக் கண்டித்து அதிமுக மாணவர் அணி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதிமுக மாணவரணி மாநில செயலாளர் சிங்கை ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, அதிமுக மகளிர் அணி செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பா.வளர்மதி தலைமை தாங்கிப் பேசுகையில், "தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் மாணவிகள் முதல், பெண் காவலர்கள் வரை யாருக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை நீடிக்கிறது. கடந்த 100 நாளில் 63 பாலியல் வன்கொடுமைகள் நடைபெற்றுள்ளன. இந்த சம்பவங்கள் குறித்து திமுக எம்.பி. கனிமொழியோ, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினோ இதுவரை எதுவும் பேசவில்லை.
பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலில் தொந்தரவுகளால் அப்பா என்று கதறும் பெண் பிள்ளைகளின் குரல் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கேட்கவில்லையா? தமிழகத்தில் பெண்கள் மீதான பாலியல் குற்றங்களுக்கு எதிராக உடனுக்குடன் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி மட்டும்தான் குரல் கொடுத்து வருகிறார். அவரது தலைமையில் அதிமுக ஆட்சிக்கு வந்தால்தான் தமிழகத்தில் பாலியல் சீண்டல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்" என்று தெரிவித்தார்.
» வணிகவரித் துறையில் ஜன.31 வரை ரூ.1.13 லட்சம் கோடி வருவாய்: அமைச்சர் பி.மூர்த்தி தகவல்
» மெட்ராஸ் ரேஸ் கிளப்பில் உள்ள கோல்ஃப் மைதானத்தில் நீர்நிலை அமைக்க தடை கோரிய வழக்கு தள்ளுபடி
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட அதிமுகவினர் தங்களது கண்களில் கருப்பு துணிகளை கட்டிக்கொண்டு திமுக அரசுக்கு எதிராக கண்டனம் முழக்கங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்துக்கு உட்பட்ட அதிமுக மாவட்ட செயலாளர்கள், மாணவரணி நிர்வாகிகள் திமுக அரசைக் கண்டிக்கும் வாசகங்கள் இடம்பெற்றிருந்த பதாகைகளை கையில் ஏந்தியபடி பங்கேற்றனர்.