மெட்ராஸ் ரேஸ் கிளப்பில் உள்ள கோல்ஃப் மைதானத்தில் நீர்நிலை அமைக்க தடை கோரிய வழக்கு தள்ளுபடி

By KU BUREAU

சென்னை: மெட்ராஸ் ரேஸ் கிளப்பில் உள்ள கோல்ஃப் மைதானத்தில் நீர்நிலை அமைக்கும் பணிகளுக்கு தடை விதிக்கக்கோரி ஜிம்கானா கிளப் தொடர்ந்த வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

சென்னை கிண்டியில் உள்ள மெட்ராஸ் ரேஸ் கிளப்பில் குதிரைப் பந்தய சுற்றுப்பாதையின் நடுவில் 147 ஆண்டுகளுக்கு முன்பாக கோல்ஃப் மைதானம் அமைக்கப்பட்டு, அதை மெட்ராஸ் ஜிம்கானா கிளப் நிர்வகித்து வருகிறது.

இந்நிலையில் ரேஸ் கிளப்புக்கு வழங்கப்பட்ட 160 ஏக்கர் நிலத்துக்கான குத்தகையை ரத்து செய்த தமிழக அரசு, ரேஸ் கிளப்பின் சில வாயில்களையும் சீல் வைத்துள்ளது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், கோல்ஃப் மைதானத்தில் நீர்நிலை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதனால் கோல்ஃப் மைதானம் சேதமடைவதாகவும், எனவே கோல்ஃப் மைதானத்தில் தமிழக அரசு மேற்கொண்டு வரும் பணிகளுக்கு தடை விதிக்க கோரியும் ஜிம்கானா கிளப் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அந்த மனுவில், நாட்டிலேயே பழமையான மூன்றாவது கோல்ஃப் மைதானமான இந்த மைதானத்துக்கு செல்லும் நுழைவாயிலை சீல் வைக்கும் முன்பாக அதிகாரிகள் தங்களது தரப்பில் விளக்கமளிக்க எந்த அவகாசமும் அளிக்கவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கெனவே அரசுக்கு எதிராக உரிமையியல் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த கோல்ஃப் மைதானத்தில் ஜிம்கானா கிளப் மற்றும் ரேஸ் கிளப் உறுப்பினர்கள் விளையாடி வந்தனர். இந்த மைதானத்தை பராமரிக்க ஆண்டுக்கு ரூ.15 லட்சம் வரை செலவிட்டு வருகிறோம். கடந்த 1951-ம் ஆண்டு கோல்ஃப் மைதானம் அருகில் மதுபான பாருடன் கூடிய கிளப் ஹவுஸ் கட்டப்பட்டு, அங்கு சமையலறை, மனமகிழ் மன்றம் செயல்பட்டு வருகிறது.

அந்த பாரில் 50-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த வசதிகளை 500-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் அரசு அதிகாரிகள் கோல்ஃப் மைதானத்துக்குள் நுழைந்து நீர்நிலை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சேதத்தை சரிசெய்ய ரூ.50 லட்சம் வரை செலவாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

பதிலுக்கு தமிழக அரசு தரப்பில், ‘‘அரசுக்கு சொந்தமான நிலம் மெட்ராஸ் ரேஸ் கிளப்புக்கு குத்தகை அடிப்படையில் விடப்பட்டது. தற்போது அந்த நிலத்தை அரசு கையகப்படுத்தியுள்ளது. அங்கு நீர்நிலைகள் அமைப்பது போன்ற பணிகளை மேற்கொள்ளக் கூடாது என வழக்குத் தொடர ஜிம்கானா கிளப்புக்கு எந்த அடிப்படை உரிமையும் கிடையாது. இதே கோரிக்கையுடன் தொடரப்பட்ட உரிமையியல் வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது" என தெரிவிக்கப்பட்டது.

அதையடுத்து நீதிபதி டி.பரதசக்ரவர்த்தி, மெட்ராஸ் ரேஸ் கிளப்புக்கு குத்தகைக்கு வழங்கிய நிலத்தில் கோல்ஃப் மைதானம் அமைந்துள்ளதால், அந்த நிலத்தை அரசு கையகப்படுத்தும் முன்பாக ஜிம்கானா கிளப்புக்கு எந்த நோட்டீஸூம் அளி்க்க வேண்டிய அவசியம் இல்லை. அதேபோல அங்கு தமிழக அரசு மேற்கொண்டு வரும் பணிகளுக்கும் தடை விதிக்க முடியாது எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE