ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக மோசடி: ராஜேந்திர பாலாஜி மீது சிபிஐ வழக்கு பதிவு

By KU BUREAU

ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக பண மோசடி நடைபெற்றதாக கூறப்பட்ட வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.​ராஜேந்திர பாலாஜி உள்பட மேலும் சிலர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.

கடந்த அ​திமுக ஆட்சி காலத்தில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் கே.டி.​ராஜேந்திர பாலாஜி. இவர், விருதுநகர் மாவட்ட ஆவினில் மேலாளர் வேலை வாங்கித் தருவதாக சாத்தூரைச் சேர்ந்த ரவீந்திரன் என்பவரிடம் 2021-ம் ஆண்டு ரூ.30 லட்சம் பெற்றுக் கொண்டு உறுதி அளித்தபடி வேலை வாங்கிக் தராமல் மோசடி செய்து விட்டதாக விருதுநகர் மாவட்ட குற்றப்​பிரிவு காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.

அதன் அடிப்​படையில் அதிமுகவைச் சேர்ந்த விஜய் நல்லதம்பி, ராஜேந்திர பாலாஜி, மாரியப்பன் ஆகிய 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்​பட்டது. அதேநாளில் சத்துணவு, கூட்டுறவு, ஆவின், ஊராட்சி செயலர் உள்ளிட்ட வேலைகளுக்கு 33 பேரிடம் பணம் பெற்று, ராஜேந்திர பாலாஜி​யிடம் ரூ.3 கோடி கொடுத்ததாக விஜய் நல்லதம்பி என்பவர் கொடுத்த புகாரின் பேரில் ராஜேந்திர பாலாஜி உட்பட 7 பேர் மீது மற்றொரு வழக்கும் பதிவானது. இதையடுத்து ராஜேந்திர பாலாஜி தலைமறை​வா​னார். பின்னர், அவர் 2022 ஜனவரியில் கர்நாடக மாநிலத்தில் தமிழக போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

கிட்டத்தட்ட 3 ஆண்டுகளை கடந்து விட்ட நிலையில் இந்த வழக்கில் எந்த முன்னேற்​றமும் இல்லை. இதையடுத்து, இந்த வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய விருதுநகர் குற்றப்பிரிவு போலீஸாருக்கு உத்தரவிடக் கோரி பணத்தை இழந்தவர்களில் ஒருவரான ரவீந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அதன்பேரில் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. எனினும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படாததால் இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவிட்டது. இந்நிலையில், ராஜேந்திர பாலாஜி உள்பட மேலும் சிலர் மீது மோசடி உள்பட 3 பிரிவுகளின் கீழ் சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது. குற்றச்சாட்டுக்கு உள்ளான அனைவருக்கும் சிபிஐ விரைவில் சம்மன் அனுப்பி விசாரணை நடத்தி உள்ளது. அதைத் தொடர்ந்து அடுத்தடுத்து விசாரணை நகர்வு இருக்கும் என்றும் மோசடியில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் தண்டனையில் இருந்து தப்ப முடியாது எனவும் சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனர்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE