மதுரை: உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் அம்பேத்கர் சிலை அமைக்கக் கோரிய மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் பொட்டப்பாளையதை்தைச் சேர்ந்த ப.வீரபாண்டியன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: 'டாக்டர் அம்பேத்கர் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் சிற்பி. அவர் சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராக பணிபுரிந்தார். நாட்டு மக்களுக்கு இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் மூலம் பேச்சு சுதந்திரம், கருத்து சுதந்திரம் உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் கிடைப்பதற்கு காரணமாக இருந்துள்ளார்.
அம்பேத்கருக்கு நாட்டில் ஏராளமான சிலைகள் உள்ளன. நாடாளுமன்றத்திலும் சிலை உள்ளது. இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவிலும் அம்பேத்கரின் தியாகத்தை கவுரவிக்கும் வகையில் அவருக்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது. மதுரையில் சென்னை உயர்நீதிமன்ற அமர்வு 2004ல் தொடங்கப்பட்டது. மதுரை அமர்வு தொடங்கி 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. மதுரை அமர்வால் எண்ணற்ற தென் மாவட்ட மக்கள் பயனடைந்து வருகின்றனர்.
இந்தியாவில் 75-வது ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு, உயர் நீதிமன்ற மதுரை அமர்வு வளாகத்தில் அம்பேத்கரின் வெண்கலச் சிலை அமைத்து, அவரை கவுரவிக்கக்கோரி தமிழக சட்ட அமைச்சருக்கு கடிதம் அனுப்பினேன். இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, உயர்நீதிமன்ற மதுரை அமர்வு வளாகத்தில் அம்பேத்கர் வெண்கல சிலை அமைக்க உத்தரவிட வேண்டும்.' இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஏ.டி.மரியகிளாட் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் சார்பில் வழக்கறிஞர்கள் மகேந்திரபதி, எஸ்.பாஸ்கர்மதுரம் வாதிட்டனர். அரசு சார்பில், உயர் நீதிமன்ற கட்டிடக்குழு அனுமதி அளித்தால் மதுரை அமர்வில் அம்பேத்கர் சிலை அமைக்க அரசு பரிசீலிக்கும் என்றனர். பின்னர் மதுரை அமர்வில் அம்பேத்கர் சிலை அமைக்கக்கோரி தாக்கலான பொது நல மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.