வேலூர் அரசு மருத்துவ கல்லூரியில் தண்டனை கைதி தப்பியோட்டம்; 2 தனிப்படைகள் தேடுதல் வேட்டை

By KU BUREAU

வேலூர்: அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட தண்டனை கைதி தப்பியோடியது குறித்து காவல் துறையினர் 2 தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

வேலூர் மாவட்டம் காட்பாடி ரயில்வே கூட்ஸ்ஷெட் அருகே சுற்றித்திரிந்தவர் பாபு அகமது ஷேக் (55). கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர். இவர், கடந்த 2021-ம் ஆண்டு காட்பாடி மகளிர் மேல்நிலை பள்ளி அருகே யாசகம் செய்தவரை அடித்துக்கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் தண்டனை பெற்ற பாபு அகமது ஷேக், வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

குடல் இறக்க நோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த அவர் சிகிச்சைக்காக கடந்த பிப். 15-ம் தேதி வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று அதிகாலை பாபு அகமது ஷேக் காவல் துறை பாதுகாப்பை மீறி தப்பிச்சென்றார். இதுதொடர்பான வேலூர் கிராமிய காவல் துறையினர் விசாரணை செய்து வரும் நிலையில், அவரை பிடிக்க 2 தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE