தூத்துக்குடி: முதியவரை கொலை செய்து 28 பவுன் நகைகளைக் கொள்ளையடித்த பிளம்பருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தைச் சேர்ந்தவர் ஜெபராஜ் ஜான் வெஸ்லி (61). கடந்த 2012ம் ஆண்டு ஆகஸ்ட் ஒன்றாம் தேதி அன்று இவரது வீட்டில் உள்ள தண்ணீர் குழாயில் பழுது ஏற்பட்டுள்ளது. இதனை சரி செய்வதற்காக, நாசரேத் திரவியபுரத்தை சேர்ந்த பிளம்பர் ஜீவராஜ் (55) என்பவரை வீட்டுக்கு அழைத்துள்ளார். வீட்டுக்கு வந்த பிளம்பர் ஜீவராஜ், பழுது நீக்கும் பணியை மேற்கொண்டுள்ளார். அப்போது, வீட்டில் இருந்த பீரோ திறந்து கிடந்துள்ளது.
இதனை நோட்டமிட்ட ஜீவராஜ், பீரோவில் இருந்த தங்கநகையை எடுத்துள்ளார். இதைப்பார்த்த ஜெபராஜ் ஜான் வெஸ்லி சத்தம் போட்டுள்ளார். உடனடியாக, வீட்டில் இருந்த பூரிக் கட்டையை எடுத்து ஜெபராஜ் ஜான் வெஸ்லியை சரமாரியாக அடித்து ஜீவராஜ் கொலை செய்தார். பின்னர், பீரோவில் இருந்த 28 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்த பின்னர் தப்பிச் சென்றுவிட்டார்.
இது குறித்த புகாரின் பேரில் நாசரேத் போலீஸார் வழக்கு பதிவு செய்து ஜீவராஜ், நகைகளை விற்பனை செய்வதற்கு ஜீவராஜுக்கு உதவிய பிரேம் குமார் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி 2-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி தாண்டவன், குற்றம் சாட்டப்பட்ட ஜீவராஜுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்தார். பிரேம்குமாரை விடுதலை செய்து உத்தரவிட்டார். இந்த வழக்கில் காவல் துறை தரப்பில் அரசு வழக்கறிஞர் ஆனந்த் கேபிரியேல் ராஜ் ஆஜரானார்.
» பேருந்து நிழற்குடை கட்ட ரூ.25 லட்சம் செலவா? - கொந்தளிக்கும் மக்கள்; செங்கல்பட்டில் அதிர்ச்சி