புதுச்சேரி: புதுச்சேரியில் அண்மையில் 3 பேர் கொல்லப்பட்டது, பள்ளிச் சிறுமி மீதான பாலியல் அத்துமீறல் குற்றச்சாட்டு உள்ளிட்ட சட்டம், ஒழுங்கு சிக்கல்கள் குறித்து உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் காவல்துறை உயரதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.
தொடர்ந்து அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, ‘புதுச்சேரியில் நடந்த 3 கொலைகள் தொடர்பாக 11 பேர் கைது செய்யப்பட்டு ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கொலை நடந்து 30 மணி நேரத்தில் அனைவரும் கைதாகியுள்ளனர். ஏற்கெனவே ‘ஆப்ரேஷன் திரிசூல்’ மூலம் குற்றச்செயலில் ஈடுபடுவோரை வீடுகளுக்கு நேரடியாக சென்று விசாரிக்கிறோம். விரைவில் ‘ஆப்ரேஷன் வேட்டை’ என்ற புதிய திட்டத்தை காவல்துறை தொடங்குகிறது. ஒவ்வொரு காவல்சரகத்திலும் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபடும் முதல் 10 குற்றவாளிகளை தொடர்ந்து கண்காணிக்க ஒவ்வொருவருக்கும் ஒரு காவலரை பிரத்யேகமாக நியமிக்கவுள்ளோம்.
இரவு ரோந்து பணி தீவிரப்படுத்தப்படும். ஊர்க்காவல் படையைச் சேர்ந்த 500 பேர் மற்றும் காவல்துறை பயிற்சி முடித்த 37 பேர் இதற்காக இம்மாத இறுதிக்குள் பணி அமர்த்தப்படுவார்கள். இரவு ரோந்து செல்லும் காவல்துறை அதிகாரிகள் விவரம் தினமும் வெளியிடப்படும். வியாபாரிகள், சாலையோர உணவகங்கள் இரவு 12 மணி வரை திறக்க திங்கள் முதலே அனுமதிக்கப் படுகிறது. சில நிறுவனங்கள் 24 மணி நேரம் செயல்பட அனுமதி கோரியிருந்தால் அரசு அனுமதிப்படி செயல்படுத்தப்படும். நகரப் பகுதி முழுவதும் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி நடந்து வருகிறது.
அப்பணி முடிந்தவுடன் 24 மணி நேரமும் நகர் பகுதி முழுக்க கண்காணிக்கப்படும். குற்றப் பதிவு விவரங்களை காவல் துறையினர் பத்திரிக்கையாளர்களுக்கு தெரிவிக்க மறுப்பது தகவல்களை மறைக்க அல்ல. இனி இதை தெரிவிக்க மக்கள் தொடர்பு அலுவலராக எஸ்எஸ்பி கலைவாணன் செயல்படுவார். குற்றவாளிகளுடன் போலீஸார் தொடர்பு இருந்தால் நடவடிக்கை எடுப்போம். ரெஸ்டோபார் ஸ்பான்சருடன் சேர்ந்து போலீஸார் ‘நோ பார்க்கிங்’ பேனர்கள் வைத்துள்ளது சரியானதல்ல. இதில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
» சாதிய வன்கொடுமையால் பாதிக்கப்பட்டோருக்கு ஓய்வூதியம்: உயர் நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு
» திண்டுக்கல் வழக்கறிஞர் மீது அமைச்சர் ஐ.பெரியசாமியின் பாதுகாப்பு போலீஸார் தாக்குதல்: சாலை மறியல்
புதுச்சேரியில் போக்குவரத்து விதிமுறைகளை பலரும் கடைபிடிப்பதில்லை. சிக்னல்களில் போலீஸாரை கூடுதலாக பணி அமர்த்தவுள்ளோம். வாகனங்கள், சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்க இருக்கிறோம். போக்குவரத்து பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முயன்று வருகிறோம்’ என்று தெரிவித்தார்.