திண்டுக்கல்: அமைச்சர் ஐ.பெரியசாமியிடம் புகார் அளிக்க சென்ற வழக்கறிஞர் மீது அமைச்சரின் பாதுகாப்பு போலீஸார் தாக்குதல் நடத்தியதை கண்டித்து வழக்கறிஞர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல்லை சேர்ந்தவர் வழக்கறிஞர் உதயகுமார். இவர் திமுக கட்சி அலுவலகம் அருகேயுள்ள தனியார் பள்ளியிலிருந்து நேற்று மாலை தனது குழந்தையை அழைத்து வரச் சென்றுள்ளார். கடந்த சில நாட்களாக இப்பகுதியில் வெட்டப்பட்ட மரக்கிளைகள் அகற்றப்படாமல் சாலையோரம் கிடப்பது பள்ளிக்கு வந்து செல்லும் பெற்றோர் இருசக்கர வாகனங்களை நிறுத்துவதற்கு இடையூறாக இருந்துள்ளது. பள்ளி முன் சாலையோரம் கிடக்கும் மரக்கிளைகளை அகற்றக்கோரி கட்சி அலுவலகத்தில் இருந்த அமைச்சர் ஐ.பெரியசாமியை சந்தித்து முறையிட வழக்கறிஞர் உதயகுமார் சென்றுள்ளார்.
இவரை வழி மறித்த அமைச்சரின் பாதுகாப்பு போலீஸார், இது குறித்து நாங்களே மாநகராட்சியிடம் கூறி நடவடிக்கை எடுக்க சொல்கிறோம் என்று கூறி, அவரை திருப்பி அனுப்ப முயன்றனர். அதற்கு அமைச்சரை சந்தித்து புகார் செய்துவிட்டுத்தான் செல்வேன் என்று கூறி, வழக்கறிஞர் உதயகுமார் கட்சி அலுவலகத்துக்குள் செல்ல முயன்றுள்ளார். இதை தடுத்த பாதுகாப்பு போலீஸாருக்கும் வழக்கறிஞருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதில் போலீஸார் வழக்கறிஞரை தாக்கியுள்ளனர்.
» திருப்பூரில் தார் சாலைகள் தரமற்ற முறையில் உள்ளன: மாவட்ட ஆட்சியரிடம் புகார்
» மேட்டுப்பாளையம் அருகே பனை மரத்தை முறித்தது பாகுபலி யானை; மின் கம்பிகள் சேதம்!
இதுகுறித்து சக வழக்கறிஞர்களுக்கு தகவல் தெரிவித்த உதயகுமார், பிற வழக்கறிஞர்கள் வந்தவுடன் திமுக கட்சி அலுவலகம் முன் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். வழக்கறிஞர்கள் போராட்டத்தை தொடங்குவதற்கு முன்பு அமைச்சர் ஐ.பெரியசாமி கட்சி அலுவலகத்தில் இருந்து காரில் வெளியே சென்றுவிட்டார். இதையடுத்து, வழக்கறிஞர்கள் அனைவரும் திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலையம் முன் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். மேலும் ஏராளமான வழக்கறிஞர்கள் போராட்டத்தில் பங்கேற்க வந்தனர்.
இதனிடையே, வாகனங்களை மாற்றுப் பாதையில் திருப்பிவிடப்பட்டதை கண்ட வழக்கறிஞர்கள் திண்டுக்கல் அண்ணா சிலை ரவுண்டானா பகுதியில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் ஏஎஸ்பி சிபின் பேச்சுவார்த்தை நடத்தினார். வழக்கறிஞரை தாக்கிய அமைச்சரின் பாதுகாப்பு எஸ்எஸ்ஐ, போலீஸார் மீது நடவடிக்கை எடுத்தால்தான் கலைந்து செல்வோம் எனக் கூறி, வழக்கறிஞர்கள் நேற்று இரவு 8.30 மணி வரை போராட்டத்தை தொடர்ந்தனர். இதனால் திண்டுக்கல் நகரில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.