தரம் உயர்த்தி 11 ஆண்டுகள் நிறைவு: திண்டுக்கல் மாநகராட்சி வளர்ச்சி காணவில்லை என புகார்

By KU BUREAU

திண்டுக்கல்: வளர்ச்சிக்கான எந்த திட்டங்களும் செயல்படுத்தப்படாமல் கடந்த 11 ஆண்டுகளாக தவிக்கும் திண்டுக்கல் மாநகராட்சி, நாளை 12-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

திண்டுக்கல் நகராட்சி 2014-ம் ஆண்டு பிப். 19-ம் தேதி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. அன்று முதல் மக்களிடம் சென்னை மாநகராட்சிக்கு இணையாக வரிகளை அதிகமாக்கி தனக்கான வருவாயை பெருக்கிக்கொண்ட மாநகராட்சி நிர்வாகம், மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து தரவில்லை. மொத்தமுள்ள 48 வார்டுகளில் பாதி வார்டுகளில் மட்டுமே பாதாள சாக்கடை திட்டம் செயல்பாட்டில் உள்ளது. மாநகராட்சியில் காலி பணியிடங்கள் நிரப்பப்படாததால் நிர்வாகப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

நகரின் மைய பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க பேருந்து நிலையத்தை புறநகர் பகுதிக்கு கொண்டு செல்ல எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தமிழக பட்ஜெட்டில் திண்டுக்கல் மாநகராட்சியில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், அதன் பின்பு திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. கடந்த 11 ஆண்டுகளாக மாநகராட்சியில் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக எந்தவிதமான வளர்ச்சிப் பணிகளும் நடைபெறவில்லை.

அதிமுக ஆட்சி காலத்தில்தான் திண்டுக்கல்லை மாநகராட்சியாக தரம் உயர்த்தி அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்புக்கு பின்பு 6 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியிலிருந்தபோது குறி்ப்பிட்டுச் சொல்லும்படியாக எந்த பணிகளும் திண்டுக்கல் மாநகராட்சியில் நடைபெறவில்லை. அதன் பிறகு ஆட்சிக்கு வந்த திமுகவும் 4 ஆண்டுகளாக எந்த பணிகளையும் மேற்கொள்ளவில்லை. புதிய பேருந்து நிலைய திட்டம், 2-ம் கட்ட பாதாள சாக்கடை திட்டம் போன்றவை அறிவிக்கப்பட்டபோதிலும், அவை செயல்பாட்டுக்கு வரவில்லை.

திண்டுக்கல் மாநகராட்சி நாளை 12-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. வரும் ஆண்டுகளிலாவது மாநகராட்சி பகுதியின் வளர்ச்சிக்கு தமிழக அரசு வழிகாட்டுமா என்ற எதிர்பார்ப்பு நகர மக்களிடையே ஏற்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE