மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் பழனிவேல் தியாகராஜன் ஆய்வுக் கூட்டம் நடத்தியதால் பரபரப்பு!

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை: நீண்ட இடைவெளிக்குப் பிறகு மாநகராட்சி அலுவலகத்துக்கு வந்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், அதிகாரிகளை அழைத்து ஆய்வுக் கூட்டம் நடத்தியிருப்பது, மேயர் இந்திராணி தரப்பினரை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது. அதிகாரிகளை கலக்கமடையச் செய்துள்ளது.

திமுக ஆட்சி அமைத்ததும் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் மதுரை மாநகராட்சியில் பெரும்பான்மை வார்டுகளை அக்கட்சி கைப்பற்றியது. அப்போது நிதி அமைச்சராக பொறுப்பு வகித்த பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், ஆட்சியிலும், கட்சியிலும் மிகுந்த செல்வாக்குடன் இருந்தார். அதனால், அவர் கை காட்டிய இந்திராணியை கட்சித் தலைமை மேயர் ஆக்கியது. மாநகராட்சி நிர்வாகம், அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கண் அசைவில் செயல்பட்டது. அவரது கருத்தையும், ஆலோசனைகளையும் கேட்டறிந்தே மேயர் இந்திராணி, ஆணையர்கள், அதிகாரிகள் செயல்பட்டனர்.

இந்நிலையில், கடந்த 2 ஆண்டுக்கு முன்பு மதுரை மாநகர திமுக மாவட்டச் செயலாளர் தேர்தல் நடந்தது. இதில், அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆதரித்த அதலை செந்தில் என்பவரை மாவட்டச் செயலாளராக ஆக்க முடியவில்லை என வருத்தம் அடைந்தார். அதிருப்தியடைந்த அவர், அதன்பிறகு மதுரையில் நடந்த கட்சி நிகழ்ச்சி ஒன்றில், திமுக மாநகர செயலாளர் தேர்தலில் நடந்த பல்வேறு விவகாரங்களை சுட்டிக்காட்டி, மாநகர திமுக செயலாளர் தளபதி தரப்பினரை மிக கடுமையாக விமர்சனம் செய்தது, கட்சியில் பரபரப்பை ஏற்படுத்தியது. கட்சித் தலைமை பழனிவேல் தியாகராஜனை அழைத்து சமாதானம் செய்தது.

அதன்பிறகு திடீரென்று பழனிவேல் தியாகராஜன், அதிகாரமிக்க நிதி அமைச்சர் பொறுப்பில் இருந்து தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சராக மாற்றப்பட்டார். அதன்பிறகு, பழனிவேல் தியாகராஜன் மாநகர திமுகவில் மட்டுமின்றி மாநகராட்சி நிர்வாக விவகாரங்களிலும் கடந்த 2 ஆண்டுகளாக தலையிடுவதில்லை. மாநகராட்சி அலுவலகத்துக்கு வந்து ஆய்வுக் கூட்டங்கள் நடத்துவதையும் தவிர்த்து வந்தார். இதனால், மாநகர செயலாளர் தளபதி, அமைச்சர் பி.மூர்த்தி மாநகராட்சி விவகாரங்களில் தலையிட்டு வந்தனர்.

மேயர் இந்திராணியும், அவர்கள் இருவரது தலையீடுகளை தடுக்க முடியாமலும், சுதந்திரமாக செயல்பட முடியாமலும் நெருக்கடிக்கு ஆளானார். அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தன்னுடைய மத்திய தொகுதிக்குட்பட்ட வார்டுகளில் மட்டும் ஆய்வு செய்து வந்தார். அதுதொடர்பான மாநகராட்சி வார்டு நிகழ்ச்சிகளில் மட்டும் பங்கேற்று வந்தார். இந்நிலையில், நீண்ட நாட்களுக்கு பிறகு திங்கள்கிழமை திடீரென்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மாநகராட்சி அலுவலகத்துக்கு வந்து அதிகாரிகளை அழைத்து ஆய்வுக்கூட்டம் நடத்தினார்.

மாநகராட்சியில் அம்ரூத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் குடிநீர் திட்டப்பணிகள் குறித்து அதிகாரிகளுக்கு ஆலோனைகளையும், உத்தரவுகளையும் பிறப்பித்தார். ஆணையர் சித்ரா, தலைமை பொறியாளர் ரூபன் சுரேஷ் மற்றும் உயர் அதிகாரிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். முல்லைப் பெரியாறு திட்டம், மாநகராட்சி நிர்வாக செயல்பாடுகளில் பல்வேறு ஆலோசனைகளை அதிகாரிகளுக்கு அவர் வழங்கினார். முல்லைப் பெரியாறு திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகளை விரைந்து மேற்கொள்ளவும், குடிநீர் குழாய்களை முறையாக பதித்து சாலைகளை உடனுக்குடன் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளவும், அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்புகள் வழங்கவும் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

நீண்ட நாட்களுக்கு பிறகு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மாநகராட்சி அலுவலகத்துக்கு வந்தது மட்டுமின்றி, அதிகாரிகளை அழைத்து ஆய்வுக் கூட்டமும் நடத்தியிருப்பது, மேயர் இந்திராணி தரப்பினருக்கு மகிழ்ச்சியையும் அதிகாரிகள் மட்டத்தில் கலகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மேயர் ஆதரவாளர்கள் கூறுகையில், “அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மாநகராட்சிக்கு வராததால் மேயர் இந்திராணி மாநகராட்சி நிர்வாக விவகாரங்களில் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. அதிகாரிகளும், மேயர் சொல்வதை முழுமையாக கேட்கவில்லை. தற்போது அமைச்சர் மாநகராட்சிக்கு வந்துள்ளதால், பழைய உற்சாகத்தை பெற்றுள்ளோம். தொடர்ந்து அவர் இதுபோல் மாநகராட்சி வார்டுகளில் நடக்கும் நிகழ்ச்சிகளில் மட்டுமின்றி மாநகராட்சி ஆய்வுக் கூட்டங்கள், நிகழ்ச்சியில் பங்கேற்று மாநகராட்சி நிர்வாகத்துக்கும், மக்களுக்கான வளர்ச்சித் திட்டப் பணிகளை செயல்படுத்துவதிலும் வழிகாட்ட வேண்டும்,” என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE