நெல்லை பட்டியலின கல்லூரி மாணவன் மர்ம மரணம் - திமுக அரசை கடுமையாக விமர்சித்த இபிஎஸ்

By KU BUREAU

சென்னை: திருநெல்வேலியில் கல்லூரி பயிலும் விக்னேஷ் என்ற பட்டியலின மாணவர், கல்லூரி விடுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியளிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ”திருநெல்வேலியில் கல்லூரி பயிலும் விக்னேஷ் என்ற மாணவர், கல்லூரி விடுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், இது குறித்து அவரது தாயார் காவல்துறையில் முறையிட்டு கழிவறையில் இருந்த அதிக அளவு ரத்தம் குறித்து கேட்க, "எறும்பு கடித்ததால் வந்திருக்கலாம்" என்று பொறுப்பற்ற முறையில் ஸ்டாலின் மாடல் திமுக அரசின் காவல்துறை தெரிவித்ததாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில் காவல்துறை விசாரணை என்பதே விந்தையானதாக மாறிவிட்டது. இசிஆர் வழக்கில் டோல் கேட்டில் விலக்கு பெற திமுக கொடி கட்டிய குற்றவாளி; இப்போது, எறும்பு கடித்து இவ்வளவு ரத்தம் சிந்தி, மர்மமாக உயிரிழந்த மாணவன் என இவர்கள் விசாரணை எல்லாம் சினிமாவில் வைத்தால் கூட யாரும் நம்ப முடியாத அளவில் தான் இருக்கிறது.

பட்டியலினத்தைச் சேர்ந்த முதல் தலைமுறை பட்டதாரியான மாணவன் விக்னேஷின் மரணத்தின் உண்மையான காரணத்தை மறைத்து திசை திருப்ப ஸ்டாலின் மாடல் திமுக அரசு முயற்சிக்குமாயின், அது கடும் கண்டனத்திற்கு உரியது. மாணவன் விக்னேஷின் மரணத்திற்கான காரணத்தை முறையாக விசாரணை செய்து கண்டறிந்து, அதில் யாருக்கேனும் தொடர்பிருப்பின், கடும் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்” என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE