நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஒரு குவிண்டாலுக்கு ரூ.100 லஞ்சம்: ராமதாஸ் கண்டனம்

By KU BUREAU

சென்னை: நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஒரு குவிண்டாலுக்கு ரூ.100 வீதம் கையூட்டு வழங்கும்படி உழவர்கள் கட்டாயப்படுத்தப் படுகின்றனர் என பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழ்நாட்டில் குறிப்பாக காவிரி பாசன மாவட்டங்களில் செயல்பட்டு வரும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஒரு குவிண்டாலுக்கு ரூ.100 வீதம் கையூட்டு வழங்கும்படி உழவர்கள் கட்டாயப்படுத்தப் படுகின்றனர். இந்த ஊழலுக்கு காரணமாக சில அடிப்படைக் கட்டமைப்புக் குறைபாடுகள் இருக்கும் நிலையில், அதை சரி செய்வதற்கு தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது கண்டிக்கத்தக்கது.

காவிரி பாசன மாவட்டங்களில் சம்பா, தாளடி பருவ அறுவடை தீவிரமடைந்திருக்கிறது. அவ்வாறு அறுவடை செய்யப்பட்ட நெல் பெரும்பாலும் தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தான் விற்பனை செய்யப்படுகிறது. அதற்காக 40 கிலோ எடை கொண்ட மூட்டைக்கு ரூ.40 வீதம் கையூட்டு வழங்கினால் தான் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால் உழவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். ஓர் ஏக்கருக்கு அதிகபட்சமாக 1600 முதல் 1800 கிலோ வரை மட்டுமே நெல் கிடைக்கும். அதன்படி, ஓர் ஏக்கருக்கு ரூ.1800 வரை கையூட்டு வழங்க வேண்டியிருக்கும். இதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது.

உலகிற்கே உணவு படைக்கும் கடவுள்கள் உழவர்கள் தான். அவர்களுக்கு வழங்கப்படும் கொள்முதல் விலை எந்த வகையிலும் போதுமானது அல்ல. ஒரு குவிண்டாலுக்கு சாதாரண ரக நெல்லுக்கு ரூ.2,405, சன்ன ரக நெல்லுக்கு ரூ.2450 வீதம் கொள்முதல் விலை வழங்கப்படுகிறது. ஏக்கருக்கு 18 குவிண்டால் நெல் விளைச்சல் கிடைப்பதாக வைத்துக் கொண்டாலும் அதன் மூலம் ரூ.43,290 மட்டும் தான் உழவருக்கு கிடைக்கும். ஓர் ஏக்கருக்கு ஒரு பருவத்திற்கு ரூ.35,000 வரை சாகுபடி செலவாகும் நிலையில், ரூ.8,290 மட்டும் தான் இலாபம் கிடைக்கும். அதிலும் ரூ.1800 கையூட்டாக வழங்க வேண்டும் என்றால், உழவர்களுக்கு ரூ.6500 மட்டுமே இலாபமாக கிடைக்கும். குறைந்தது 5 மாதங்கள் கடுமையாக உழைத்தும் ஏக்கருக்கு ரூ.6500 மட்டுமே கிடைக்கிறது என்றால், அது இலாபம் ஈட்டும் தொழில் அல்ல என உறுதியாகக் கூறலாம்.

நெல் கொள்முதல் நிலையங்களில் நிலவும் இந்தக் கையூட்டு குறித்து ஆய்வு செய்த தி இந்து ஆங்கில நாளிதழின் செய்தியாளர், இந்தக் கையூட்டுக்குப் பின்னணியில் சில காரணங்கள் இருப்பதாகக் கூறியுள்ளார். உழவர்களிடம் இருந்து கையூட்டு வாங்குவது எந்த வகையிலும் நியாயமல்ல என்றாலும் கூட, தற்போதைய சூழலில் அதைத் தடுத்து நிறுத்துவதற்கு வாய்ப்புகள் இல்லை என்று கொள்முதல் நிலைய பணியாளர்களைக் மேற்கோள் காட்டி அந்த செய்தியாளர் தெரிவித்திருக்கிறார்.

கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் குறைந்தது ஒரு வாரத்திற்கு கொள்முதல் நிலையங்களில் வைக்கப்பட்டிருந்தால், அதன் ஈரப்பதம் குறைந்து 40 கிலோ மூட்டைக்கு ஒரு கிலோ முதல் 2 கிலோ வரை எடை குறையக்கூடும் என்றும், அதற்கு நெல் கொள்முதல் நிலையப் பணியாளர்கள் தான் பொறுப்பேற்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது. அதனால், ஒரு மூட்டைக்கு ரூ.50 வரை இழப்பு ஏற்படக்கூடும் என்றும், அதை சமாளிக்கவே கையூட்டு வாங்கப் படுவதாகவும் கொள்முதல் நிலையப் பணியாளர்கள் கூறுகின்றனர். இது தவிர, நெல் மூட்டைகளை ஏற்றிச் செல்ல வரும் வாகனங்களுக்கு ரூ.4000 வரை கையூட்டு வழங்க வேண்டியிருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

கையூட்டு வாங்குவதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது என்றாலும் கூட, அதே நேரத்தில் இந்தக் காரணங்களையும் ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. கையூட்டு வாங்குவதற்கு என்ன காரணங்கள் கூறப்பட்டாலும், இறுதியில் பாதிக்கப்படுபவர்கள் உழவர்கள் தான். உழவர்களின் நலனில் தமிழக அரசுக்கு அக்கறை இருந்தால், இந்த சிக்கலுக்கு தீர்வு காண நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும். கையூட்டு வாங்கப்படுவதற்கு அமைப்பு சார்ந்த பிரச்சினைகள் தான் காரணம் எனத் தெளிவாகத் தெரிவதால் அவற்றை சீரமைக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால், ஆட்சியாளர்கள் அதற்காக எந்த நடவடிக்கையுமே மேற்கொள்வதில்லை என்பது தான் மிகவும் வேதனை அளிக்கும் உண்மையாகும்.

நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் எதிர்கொண்டு வரும் சிக்கல்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக 1995ம் ஆண்டில் அமைக்கப்பட்டக் குழு, நெல்லின் ஈரப்பதம் 18%-க்கும் குறைவாக இருந்தால், அந்த நெல்லின் எடை 15 நாட்களில் 4% அளவுக்கும், 18%-க்கும் கூடுதலாக இருந்தால் 7.7% அளவுக்கும் குறைவதாகவும், அதற்கேற்ற வகையில் கொள்முதல் செய்யப்படும் நெல்லின் எடை கழிக்கப்பட வேண்டும் என்றும் பரிந்துரைத்திருந்தது. ஆனால், அதன்பின் 30 ஆண்டுகள் ஆகி விட்டன. 5 முதல்வர்கள் மாறி விட்டார்கள். ஆனால், அந்தப் பரிந்துரை குறித்து தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களின் நிர்வாக கட்டமைப்பில் இவ்வளவு பிரச்சினைகளை வைத்துக் கொண்டு கையூட்டைத் தடுக்க முடியாது. எனவே, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் செய்யப்பட வேண்டிய அமைப்பு சார்ந்த சீர்திருத்தங்கள் அனைத்தையும் தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும். அதன் மூலம் உழவர்களிடம் பணம் பறிக்கப்படுவதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும்" என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE