திருச்சி பள்ளியை மூட பொதுநல வழக்கு: மனுதாரருக்கு ரூ.1.50 லட்சம் அபராதம் விதித்தது உயர் நீதிமன்றம்!

By KU BUREAU

திருச்சி: பள்ளியை மூடக்கோரி பொதுநல வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.1.50 லட்சம் அபராதம் விதித்து, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருச்சியைச் சேர்ந்த அரவிந்த், திருச்சி மேலஅம்பிகாபுரத்தில் மாநகராட்சி குப்பைக் கிடங்கு அருகே இயங்கும் பள்ளியை வேறு இடத்துக்கு மாற்ற உத்தரவிட வேண்டும் என, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்து நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், ஆர்.பூர்ணிமா அமர்வு பிறப்பித்த உத்தரவு: மனுதாரர் பள்ளி குப்பைக் கிடங்கு அருகே செயல்படுவதால், பள்ளியை மூடவேண்டும் என மனுவில் கூறியுள்ளார். மாற்று இடம் சொல்லாமல் பள்ளியை மூடுவதில் மட்டுமே மனுதாரர் ஆர்வமாக உள்ளார். பொதுநல வழக்கு என்ற பெயரில் இதுபோன்ற நிவாரணம் கோருவதை ஏற்க முடியாது. குப்பைக் கிடங்குக்கு மாற்று இடத்தை தெரிவிப்பதில், திடக்கழிவு மேலாண்மை திட்டத்துக்கு ஏற்பாடு செய்யக் கோருவதில் மனுதாரருக்கு ஆர்வம் இல்லை. பள்ளியை மூடவேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார்.

இதனால், மனுதாரருக்கு ரூ.1.50 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது. இப்பணத்தை தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு செலுத்த வேண்டும். மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE