அதிமுக முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலத்துக்கு பதவி: பெருந்துறை திமுக செயலாளர் ராஜினாமா

By KU BUREAU

ஈரோடு: பெருந்துறை தொகுதி எம்.எல்.ஏ.வாகவும், அமைச்சராகவும் இருந்த தோப்பு வெங்கடாசலத்துக்கு, கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில், அதிமுக வாய்ப்பு வழங்கவில்லை. இதையடுத்து சுயேச்சையாக போட்டியிட்டு தோல்வி அடைந்த அவர், தேர்தல் முடிவுக்கு பின்னர் திமுகவில் சேர்ந்தார்.

கடந்த மூன்று ஆண்டுகளாக திமுகவில் அவருக்கு கட்சி பதவி வழங்கப்படாத நிலையில், பெருந்துறை, பவானி தொகுதிகள் அடங்கிய பகுதியை ஈரோடு மத்திய மாவட்டமாக பிரித்து திமுக தலைமை அறிவித்தது. ஈரோடு மத்திய மாவட்ட திமுக செயலாளராக தோப்பு வெங்கடாசலம் அறிவிக்கப்பட்டார்.

அதிமுகவில் இருந்து திமுகவுக்கு வந்த தோப்பு வெங்கடாசலத்துக்கு மாவட்ட செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது திமுகவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக பெருந்துறை ஒன்றிய திமுக செயலாளராக பதவி வகித்து வந்த கே.பி.சாமி, தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதற்கான கடிதத்தை கட்சி தலைமைக்கு அவர் அனுப்பியுள்ளார்.

இதுகுறித்து திமுக நிர்வாகிகள் கூறியதாவது: பெருந்துறை தொகுதியில் அதிமுக எம்எல்ஏ, அமைச்சர் ஆகிய பொறுப்புகளை வகித்த தோப்பு வெங்கடாசலத்துக்கு எதிராக பல ஆண்டுகளாக திமுக நிர்வாகிகளாக நாங்கள் அரசியல் செய்து வருகிறோம். இந்நிலையில், சமீபத்தில் திமுகவில் சேர்ந்த தோப்பு வெங்கடாசலத்துக்கு மாவட்ட செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

இது குறித்து கட்சித் தலைமைக்கு எங்கள் எதிர்ப்பைத் தெரிவித்து விட்டோம். இதன் ஒரு பகுதியாக பெருந்துறை ஒன்றிய செயலாளரான கே.பி.சாமி தனது பதவியை ராஜினாமா செய்து கட்சித்தலைமைக்கு கடிதம் அனுப்பி உள்ளார். அவரது ராஜினாமாவை கட்சித்தலைமை ஏற்கவில்லை. அவரை சமாதானப்படுத்தும் முயற்சி நடந்து வருகிறது. ஒன்றியச் செயலாளரைத் தொடர்ந்து திமுக நிர்வாகிகள் பலரும் தங்கள் எதிர்ப்பை கட்சித் தலைமைக்கு தெரிவித்துள்ளனர், என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE