கர்நாடகாவிலிருந்து அதிகளவில் மதுபானங்கள் கடத்தல்: வேலூர் எல்லையில் தீவிர கண்காணிப்பு

By KU BUREAU

வேலூர்: கர்நாடக மாநில மதுபானங்களை கடத்தி வந்து வேலூர் மாவட்டத்தில் விற்பனை செய்வதை தடுக்க எல்லையோர சோதனை சாவடிகள் பலப்படுத்தப்பட்டு 24 மணி நேரம் கண்காணிக்கப்படுகிறது. கூடுதலாக வனப்பகுதி வழியாக மதுபானம் கடத்தலை தடுக்க உதவி ஆய்வாளர் தலைமையிலான ஒரு குழுவினர் வாகன ரோந்துப்பணியில் ஈடுபட்டு வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் தெரிவித்தார்.

இதுகுறித்து வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘வேலூர் மாவட்டத்தில் குற்றங்களை தடுக்க ‘4பி திட்டம்’ செயல்படுத்தப்படவுள்ளது. அதன்படி, ஒவ்வொரு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட இடங்களில் என்ன பிரச்சினை (problem), அது நடைபெறும் இடம் (place), அதை ஏற்படுத்தும் நபர் (person), அதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை (prevention) என்பதை கண்டறிந்து செயல்பட திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல், கர்நாடக மாநிலத்தில் இருந்து மதுபானங்களை கடத்தி வந்து வேலூர் மாவட்டத்தில் விற்பனை செய்வதை தடுக்க எல்லையோர சோதனை சாவடிகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

குறிப்பாக, பேரணாம்பட்டு அடுத்த பத்தலப்பல்லி, அரவட்லா மற்றும் சைனகுண்டா ஆகிய எல்லையோர சோதனை சாவடிகள் பலப்படுத்தப் பட்டு தீவிர வாகனத் தணிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒவ்வொரு சோதனை சாவடியிலும் 4 காவலர்கள் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், வனப்பகுதி வழியாக மதுபானங்கள் கடத்தி வருவதை தடுக்க ஒரு உதவி ஆய்வாளர் தலைமையில் 4 காவலர்களுடன் கூடிய ஒரு வாகன ரோந்து கண்காணிப்பும் நடைபெறுகிறது. இதன்மூலம், வெளி மாநிலங்களில் இருந்து மதுபானங்களை கடத்தி வருவது தடுக்கப்பட்டு வருகிறது.

பேரணாம்பட்டு சுற்று வட்டாரங்களில் சாராயம் தயாரிப்பு இல்லை என்பதால் பலர் கர்நாடக மாநில மதுபானங்களை கடத்தி வந்து விற்பனை செய்வதாக தெரியவந்தது. இதுதொடர்பாக தலைமறைவாக இருந்த 10 பேர் கைது செய்யப்பட்டனர். அதேபோல், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான போக்சோ குற்றங்களை தடுக்க விழிப்புணர்வு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதுதொடர்பாக, ‘போலீஸ் அக்கா' என்ற திட்டத்தின்கீழ் அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் தலா ஒரு பெண் காவலர்கள் நியமிக்கப்பட்டு அங்கு படிக்கும் மாணவிகளுக்கு விழிப்புணர்வு, பாதுகாப்பு ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE