ஈரோடு: சேலம், தருமபுரி போன்ற மாவட்டங்களில் புதிய மஞ்சள் அறுவடை நடந்து வருவதால், ஈரோடு மஞ்சள் சந்தைக்கு புது மஞ்சள் வரத்து அதிகரித்துள்ளது. புது மஞ்சளுக்கு அதிக விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு மற்றும் பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடம், ஈரோடு மற்றும் கோபி கூட்டுறவு சங்கம் ஆகிய நான்கு இடங்களில் ஏலம் மூலம் மஞ்சள் விற்பனை நடந்து வருகிறது. வாரத்தில் திங்கள் முதல் வெள்ளி வரை நடக்கும் ஏலத்தில், வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த வியாபாரிகளும் பங்கேற்று மஞ்சள் விற்பனை மற்றும் கொள்முதல் செய்து வருகின்றனர்.
அதிகபட்ச விலை
மஞ்சள் விவசாயிகள் தாங்கள் விளைவித்த மஞ்சளை, விலை உயர்வுக்கு ஏற்ப விற்பனைக்கு கொண்டுவருவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். கடந்த, 2011-க்கு பின் மஞ்சள் விலை அதிகம் உயராததால், விவசாயிகளால் அதிக அளவிலான மஞ்சள் இருப்பு வைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், கடந்த ஆண்டு மஞ்சள் விலை குவிண்டால், ரூ.21 ஆயிரம் வரை விற்பனையானது. அதன்பிறகு கடந்த சில மாதங்களாக மஞ்சள் விலை குவிண்டால் ரூ.10 ஆயிரத்துக்கு மேல் விற்பனையானதால், இருப்பில் வைத்திருந்த பழைய மஞ்சளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
» கொடைக்கானல் மலைப் பகுதியில் பரவும் காட்டுத் தீ: அணைப்பதற்கு வனத்துறை தீவிரம்!
» சிவகங்கை கோவானூரில் 250 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டெடுப்பு: முக்கிய தகவல்கள் வெளியானது!
வியாபாரிகள் ஆர்வம்
இந்நிலையில் ஈரோடு, சேலம், தருமபுரி போன்ற மாவட்டங்களில் தற்போது புது மஞ்சள் அறுவடை நடந்து வருகிறது. புதுமஞ்சளுக்கு குவிண்டால் ரூ.1,500 வரை கூடுதல் விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இது குறித்து ஈரோடு மஞ்சள் வணிகர்கள் மற்றும் கிடங்கு உரிமையாளர்கள் சங்க செயலாளர் சத்தியமூர்த்தி கூறியதாவது: ஈரோடு பகுதி விற்பனைக் கூடங்களில் பழைய மஞ்சள் குவிண்டால் ரூ.7,000 முதல் ரூ.13,500 வரை விற்பனையாகிறது. புதிய மஞ்சள் குவிண்டால், ரூ.1,000 முதல் ரூ.1,500 வரை உயர்ந்து ரூ.12,500 முதல் ரூ.14,500 வரை விற்பனையாகிறது.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியில் கடந்த 10 நாட்களுக்கு முன் அறுவடை தொடங்கி புதிய மஞ்சள் வரத்தாகிறது. கர்நாடகாவிலும், தருமபுரி மாவட்டத்திலும் அறுவடை நடந்ததால் அங்கிருந்தும் ஈரோட்டுக்கு மஞ்சள் வரத்தாகிறது. புதிய மஞ்சளுக்கு தேவை இருப்பதால் அவற்றை வியாபாரிகள் ஆர்வத்துடன் வாங்குகின்றனர்.
ஆன்லைனில் முன்பதிவு
அதேநேரம், நிஜாமாபாத் பகுதியில் அடுத்த வாரங்களில்தான் முழு அளவில் அறுவடை நடக்கவுள்ளது. தற்போது, மகாராஷ்டிரா மாநிலம் சாங்கிலி, மராத்வாடா பகுதியில் இருந்து மஞ்சள் வரத்து அதிகரித்துள்ளது. ஆன்லைனில் வரும் ஏப்ரல் மாதம் கொள்முதல் செய்யும் வகையில் குவிண்டால், ரூ. 13 ஆயிரம் முதல், ரூ. 15 ஆயிரம் வரை விவசாயிகள் பதிவு செய்து வைத்து வருகின்றனர். புதிய மஞ்சள் முழு அளவில் வரத்தாகும்போது, விலை நிலவரம் மாறும். அதை வரை சீராக உயரும். இவ்வாறு அவர் கூறினார்.