கொடைக்கானல் மலைப் பகுதியில் பரவும் காட்டுத் தீ: அணைப்பதற்கு வனத்துறை தீவிரம்!

By KU BUREAU

திண்டுக்கல்: கொடைக்கானல் மலைப் பகுதியில் கடந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழையைத் தொடர்ந்து, வடகிழக்குப் பருவ மழையும் அதிகம் பெய்ததால் மலைப்பகுதி முழுவதும் செடி, கொடிகள் வளர்ந்து, பசுமைப் போர்வை விரித்ததுபோல காணப்படுகிறது. இது சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவர்ந்ததுடன், மலைப் பயிர்களுக்கும் மழை உதவியது.

இந்நிலையில், கடந்த ஆண்டு அதிக வெப்பம் காரணமாக கோடைகாலத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக காட்டுத்தீ பற்றியது. மேல்மலை பகுதியில் தொடர் காட்டுத் தீயால் பெரும் வனப்பரப்பு எரிந்து சேதமானது.

நடப்பாண்டு அதுபோலோ பாதிப்பு ஏற்படாமல் தடுக்க வனத் துறையினர், தீயணைப்புத் துறையினர் முன்னெச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோடைகாலம் தொடங்க இன்னும் ஒரு மாதம் உள்ள நிலையில், ஆங்காங்கே சிறிய அளவில் காட்டுத் தீ பற்றி எரியத் தொடங்கியுள்ளது.

நேற்றிரவு பெரும் பள்ளம் வனச் சரகத்துக்கு உட்பட்ட ஜெரோனியம் வனப் பகுதியில் காட்டுத் தீ பெரிய அளவில் பரவத் தொடங்கியது. இதனால் வனப் பகுதியில் உள்ள செடி, மரங்கள் மற்றும் தனியார் தோட்டத்தில் உள்ள மரங்களும் தீக்கிரையாகின. இரவில் தீ கொளுந்துவிட்டு எரிந்தது. வனத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இரண்டாவது நாளாக பெரும்பள்ளம் பகுதியில் காட்டுத் தீ பரவி வருகிறது. தீ மேலும் பரவாமல் தடுக்க வனத் துறையினர் தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.

"கடந்த ஆண்டு மேல்மலைப் பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயால் பெரும் பரப்பிலான மூலிகைச் செடிகள், அரியவகை மரங்கள் கருகின. நடப்பாண்டு இந்நிலை ஏற்படாமல் தடுக்க வனத் துறையினர் நவீன வகை தீத் தடுப்பு கருவிகளைப் பயன்படுத்தி, உடனுக்குடன் காட்டுத் தீயை அணைக்க வேண்டும்" என்று இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE