நீலகிரி: உதகை 28-வது வார்டு ஃபர்ன்ஹில் பகுதியில் இயங்கி வரும் ஓட்டலில் இருந்து நேற்று சாலையில் கழிவு நீர் திறந்துவிடப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசியதால், ஓட்டலை கண்டித்து அந்த பகுதி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலின் பேரில் நகராட்சி ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு செய்து, சாலையில் கழிவுநீரை திறந்துவிட்ட ஓட்டலுக்கு ரூ.50,000 அபராதம் விதித்தனர். போலீஸார், நகராட்சி ஊழியர்கள் பேச்சுவார்த்தை நடத்தி, பொதுமக்களை சமாதானப்படுத்தினர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.
இது குறித்து பொதுமக்கள் கூறும்போது, ”ஏற்கெனவே இந்த ஓட்டலில் பணியாற்றும் ஊழியர்கள் பலமுறை கழிவு நீரை வெளியில் திறந்து விட்டுள்ளனர். இந்த பகுதியில் வசிக்க முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதாரச் சீர்கேடும் ஏற்பட்டது. உதகையில் பல ஓட்டல்களில், இதே முறையை தான் ஊழியர்கள் கடைபிடிக்கின்றனர். இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். அனைத்து ஓட்டல்களிலும் கழிவுநீர் இணைப்பு முறையாக உள்ளதா? என்பதை நகராட்சி ஊழியர்கள் ஆய்வு செய்ய வேண்டும்” என்றனர். ஏற்கெனவே கழிவுநீரை சாலையில் திறந்து விட்டதற்காக இந்த ஓட்டலுக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.