பாஜகவுடன் விஜய்க்கு உறவு இருக்கிறது: அமைச்சர் தா.மோ.அன்பரசன் குற்றச்சாட்டு

By KU BUREAU

தாம்பரம்: குரோம்பேட்டை பேருந்து நிறுத்தம் அருகே நண்பர்கள் அறப்பணி மன்றம் சார்பில் போதை இல்லாத தமிழகம் என்ற தலைப்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 5000 பேர் கலந்து கொண்ட மாரத்தான் போட்டி நேற்று நடைபெற்றது.

மன்றத்தின் தலைவர் டாக்டர் அரவிந்தராஜ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்துகொண்டு மாரத்தான் போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதில் பங்கேற்றவர்கள் குரோம்பேட்டை பேருந்து நிலையம் அருகிலிருந்து புறப்பட்டு சுமார் 5 கி.மீ. தூரம் சென்று மீண்டும் குரோம்பேட்டை பேருந்து நிலையத்தை வந்தடைந்தனர். இதில் முதல் 3 இடங்களைப் பிடித்தவர்களுக்கு ஊக்கத் தொகையுடன் கோப்பை, பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. அதேபோல போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறியதாவது: தமிழக மக்களிடையே போதை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 5 ஆயிரம் பேர் கலந்து கொண்ட இந்த மாரத்தான் போட்டி இங்கு நடைபெற்றது. தமிழக முதல்வர் இளைஞர்களை போதையிலிருந்து பாதுகாக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறார்.

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு `ஒய்' பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டதிலிருந்து பாஜகவும் அவரும் கூட்டணியில்தான் இருக்கிறார்கள் என்பது தெரிகிறது. அவர் இன்னும் களத்துக்கே வரவில்லை அவர் கேட்காமலேயே ஒன்றிய அரசு அவருக்கு பாதுகாப்பு வழங்குகிறது என்றால், பாஜவுக்கும் தவெகவுக்கும் உறவு இருக்கிறது என்றுதான் அர்த்தம் என தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் பல்லாவரம் சட்டப்பேரவை உறுப்பினர் இ.கருணாநிதி, தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி, துணை மேயர் கோ.காமராஜ், மண்டல குழுத் தலைவர் இ.ஜோசப் அண்ணாதுரை உட்பட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE