தமிழகத்தில் திருநர்களின் நலன் காக்க தனிக் கொள்கையை உருவாக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.
இதுகுறித்து கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் நேற்று வெளியிட்ட அறிக்கை: எல்ஜிபிடிகியூஐஏ+ எனப்படும் வெவ்வேறு பாலின அடையாளத்தவர் ஒரே குழுவாக குறிப்பிடப்பட்டாலும் கூட, திருநர் என்போர் தம் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் ஒதுக்குதல்களும், துன்புறுத்தல்களும் சில குறிப்பான கொள்கை தலையீட்டின் மூலம் மாற்றியமைக்க வேண்டிய தேவையுள்ளது. தன்பாலின ஈர்ப்பாளர்களின் பிரச்னைகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டது திருநங்கையர்களின் பிரச்சினை என்பதை தமிழக அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஏற்கெனவே, சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இந்த பிரிவினருக்கென்று தனிக்கொள்கை உருவாக்க வேண்டுமென மாநிலங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. ஏற்கெனவே, திருநர்களுக்கு என முதன் முதலில் கொள்கைகளை உருவாக்கியது கேரள இடதுசாரி அரசு என்பதும், திருநங்கையரின் கோரிக்கை அடிப்படையில், 2008-ல் தமிழ்நாடு திருநங்கையர் நலவாரியத்தை அமைத்தது தமிழக அரசு என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று.
திருநருக்கு நிகழ்ந்துவரும் சமூக ஒதுக்குதல்கள் காரணமாக யாசித்தல், பாலியல் சுரண்டல் போன்ற அவலங்களுக்குள் தள்ளப்படுவதை தடுக்க, இடஒதுக்கீடு, கல்வி, வேலைவாய்ப்பு, இருப்பிடம் ஆகியவற்றை உறுதி செய்யும் விதத்தில் திருநர்களுக்கான தனிக்கொள்கையை உருவாக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை வலியுறுத்துகிறது. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
» தமிழக காவல் துறை ஏவல்துறையாக மாறிவிட்டது: அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி விமர்சனம்
» திருப்பூர் அலகுமலையில் ஜல்லிக்கட்டு: ஆர்ப்பரித்த காளைகளை அடக்கிய வீரர்கள்