மதுரை: கீழக்கரை கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கில் ஏற்கெனவே 2 நாட்கள் ஜல்லிக்கட்டு நடந்த நிலையில், இன்று 3வது நாள் போட்டியில் அரட்டிய காளைகளை அடக்கி வீரர்கள் தங்கக்காசு உள்ளிட்ட பரிசு பொருட்களை வென்றனர்.
தமிழக துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாளையொட்டி சோழவந்தான் தொகுதி சார்பில், மதுரை அலங்காநல்லூர் அருகிலுள்ள கீழக்கரை கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கில் 3வது நாள் ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடந்தது. அமைச்சர் பி. மூர்த்தி போட்டியை காலை 7 மணிக்கு தொடங்கி வைத்தார். முன்னதாக அமைச்சர், அதிகாரிகள் முன்னிலையில் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். மருத்துவக்குழுவினர் காளைகள், மாடுபிடி வீரர்களுக்கு உடல் தகுதி பரிசோதனை செய்தனர். இதன் பிறகே காளைகளும், காளையர்களும் அனுமதிக்கப்பட்டனர். முதலில் கிராம கோயில் காளை அவிழ்த்த நிலையில், தொடர்ந்து போட்டிக்கு பதிவு செய்த காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன.
வாடிவாசலில் சீறிப் பாய்ந்த காளைகளை வீரர்கள் போட்டிப்போட்டுக் கொண்டு அடக்கினர். சில காளைகள் வீரர்களின் பிடியில் சிக்காமல் துள்ளி குதித்து தப்பின. இன்னும் ஓரிரு காளைகள் பிடிக்க முயன்ற வீரர்களை அரட்டி, கொம்புகளால் பதமும் பார்த்தன. காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், காளை உரிமையாளர்களுக்கும் தங்கக்காசு, சைக்கிள், டிவி, மிக்ஸி உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கினர்.
» மும்மொழி கொள்கை விவகாரத்தில் பாஜகவை எதிர்ப்பாரா பதுங்குக்குழி பழனிசாமி ? - செந்தில் பாலாஜி காட்டம்
போட்டியில் சோழவந்தான் தொகுதியைச் சேர்ந்த சுமார் 1000க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. 500 மாடுபிடி வீரர்களும் சுழற்சி முறையில் களமிறக்கப்பட்டனர். காளைகள் முட்டியதில் 10 வீரர்கள், போலீஸ்காரர் ஒருவர், பார்வையாளர்கள் என 40க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இவர்களில் 8 பேர் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அந்த அரங்கில் கடந்த 2 நாட்களைவிட இன்றைய ஜல்லிக்கட்டு போட்டியை கூடுதலான பார்வையாளர்கள் திரண்டு பார்த்து ரசித்தனர். பொதுமக்களுக்கு வசதியாக பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து கீழக்கரைக்கு சென்று போட்டியை பார்க்க சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன. தென்மண்டல ஐஜி பிரேம் ஆனந்த் சின்கா ஆலோசனைபேரில் மதுரை எஸ்பி அரவிந்த் தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.
இந்த ஜல்லிக்கட்டு போட்டியை பிக்பாஸ் போட்டியில் பங்கேற்ற பட்டிமன்ற பேச்சாளர் அன்னபாரதி தொகுத்து வழங்கினார். போட்டிக்கு இடையிடையே டிஜே. இசை நிகழ்ச்சியும் நடந்தது. இப்போட்டியை ஆட்சியர் சங்கீதா, தேனி தொகுதி எம்பி தங்கத்தமிழ்செல்வன், சோழவந்தான் எம்எல்ஏ ஆ.வெங்கடேசன், மதுரை தெற்கு தொகுதி எம்எல்ஏ பூமிநாதன், மாவட்ட வருவாய் அலுவலர் நரேந்திரன் கோட்டாட்சியர் ஷாலினி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.