மூணாறு அதிர்ச்சி: வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் சென்ற காரை கவிழ்த்த காட்டு யானை

By KU BUREAU

மூணாறு: மூணாறில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் சென்ற சொகுசு காரை, காட்டு யானை கவிழ்த்தது. அவர்கள் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.

இங்கிலாந்து நாட்டில் உள்ள லிவர்பூல் பகுதியில் இருந்து 4 பேர் கொண்ட குழுவினர், கேரள மாநிலம் மூணாறுக்கு சுற்றுலா வந்திருந்தனர். இவர்கள் 2 தினங்களாக மாட்டுப்பட்டி அணை, குண்டலணை, எக்கோ பாயின்ட், தேயிலை தொழிற்சாலை உள்ளிட்ட பல பகுதிகளையும் சுற்றிப் பார்த்தனர். பின்னர், தேக்கடி செல்ல திட்டமிட்டனர்.

அதன்படி, நேற்று காரில் தேவிகுளம் நோக்கிச் சென்றுகொண்டிருந்தனர். கொச்சி - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை தேவிகுளம் காட்டுப்பகுதியை கடந்து சென்றபோது, ஆண் காட்டு யானை திடீரென குறுக்கிட்டது. பின்னர் காரை கவிழ்த்தது. அப்பகுதியில் வந்த மற்ற வாகனங்களில் இருந்து ஒலி எழுப்பப்பட்டு யானையை விரட்டினர். கார் கவிழ்ந்ததில் சுற்றுலா பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது. மேலும், காரின் பக்கவாட்டு கண்ணாடிகள், கதவுகள் சேதமடைந்தன.

பின்னர், காட்டுப்பகுதிக்குள் நுழைந்த யானை, அங்கு மேய்ந்துகொண்டிருந்த ஆறுமுகம் என்பவரின் மாட்டை தந்தத்தால் குத்திக் கொன்றது. தகவல் அறிந்து வந்த வனத்துறையின் யானை விரட்டும் சிறப்புக் குழுவினர், பட்டாசுகளை வெடித்து யானையை காட்டுக்குள் விரட்டினர். இதனால், அப்பகுதியில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதித்தது.

வனத்துறையினர் கூறுகையில், வாகனங்கள் செல்லும்போது சாலையில் யானை குறுக்கிட்டால், ஒலி எழுப்பி, இன்ஜினை அதிகமாக அலறவி்ட்டு, முகப்பு விளக்குகளையும் ஒளிர விடவேண்டும். இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு, பாதுகாப்பான தூரத்தில் காரை நிறுத்திவிட்டால் யானை தானாக விலகிச் சென்றுவிடும்’ என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE