வால்பாறையில் அதிர்ச்சி: குடியிருப்பு பகுதியில் சிறுத்தை நடமாட்டம்; பொதுமக்கள் பீதி

By KU BUREAU

ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் வால்பாறை அமைந்துள்ளது. சுற்றிலும் தேயிலை தோட்டம், சோலை காடுகள் உள்ளன. இங்குள்ள வனப்பகுதியில் இருந்து இரவு நேரங்களில் வெளியேறும் வனவிலங்குகள் அடிக்கடி வால்பாறை நகர் மற்றும் சாலைகளில் சுற்றித் திரிவது வழக்கம். தற்போது, வால்பாறையில் குடியிருப்பு பகுதி அருகிலேயே, பகல் நேரத்தில் வனவிலங்குகள் நடமாடுவதால் சுற்றுலா பயணிகள் அச்சமடைந்துள்ளனர்.

வால்பாறை நகர் வாழைத்தோட்டம் பகுதியில், கடந்த சில நாட்களாக இரவு நேரத்தில் சிறுத்தைகள் நடமாட்டம் தொடர்ந்து காணப்பட்டதால், இந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள், இரவு நேரத்தில் நடந்து செல்ல அச்சமடைந்தனர்.

இந்நிலையில் சுற்றுலா பயணிகள் தங்கும் விடுதிகள் அதிக அளவில் உள்ள காமராஜ் நகர் பகுதியில் குடியிருப்பு பகுதியை ஒட்டியுள்ள பகுதியில், பகல் நேரத்தில் சிறுத்தை பதுங்கியிருப்பதை, சுற்றுலா பயணிகள் நேரில் பார்த்து அச்சமடைந்துள்ளனர்.

இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது: வால்பாறையை சுற்றியுள்ள எஸ்டேட் பகுதியில் மட்டுமே உலா வந்த சிறுத்தைகள், சமீப காலமாக மக்கள் நெருக்கம் மிகுந்த வால்பாறை நகரிலும் உலா வர தொடங்கியுள்ளன. தேயிலை தோட்டத்தை ஒட்டியுள்ள காமராஜ் நகர் பகுதியில், பகல் நேரத்திலேயே சிறுத்தையின் நடமாட்டம் காணப்படுகிறது.

இதனால், மாலை நேரங்களில் குழந்தைகள் வெளியில் விளையாடக்கூட முடியவில்லை. சிறுத்தை நடமாட்டத்தால் உள்ளூர் மக்களுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் போதிய பாதுகாப்பில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, சிறுத்தையை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடிக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE