திமுக கூட்டணிக்குள் முரண்பாடா? - முதல்வர் ஸ்டாலின் பரபரப்பு பதில்

By KU BUREAU

சென்னை: “திமுக கூட்டணி கட்சிகளின் கருத்துகளை ஆலோசனையாகத்தான் பார்க்கிறேன். முரண்பாடாக நினைப்பது இல்லை. கருத்து வேறுபாடுகள் எங்கும் இருக்கும். கருத்து முரண்பாடுகளால் எங்கள் நட்புறவில் எந்த பாதிப்பும் இல்லை” என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

மத்திய பட்ஜெட்டில் தமிழகம் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறது. மத்திய அரசு தொடர்ந்து நம்மை வஞ்சிக்கிறது என்று முதல்வர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ”மத்திய பட்ஜெட்டில் தமிழகத்தை முழுமையாக புறக்கணிக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளாகவே தமிழகத்துக்கு எந்த நிதியும் இல்லை. பெயர்கூட சொல்வது இல்லை. மத்திய அரசு வெளியிடும் அனைத்து புள்ளி விவரங்களிலும், தமிழகம் சிறப்பாக செயல்படுவதாக அறிக்கை தருகின்றனர். ஆனால், பணம் மட்டும் தராமல் முரண்டு பிடிக்கின்றனர். அதனால், மாநில அரசின் நிதியை வைத்து திட்டங்களை செயல்படுத்துகிறோம்.

நம் மாணவர்கள் படிப்பதற்கான நிதியைக் கூட தராமல் மறுத்தால் என்ன அர்த்தம். ஏற்கெனவே வழங்கி வந்த நிதியையும் நிறுத்தினால் என்ன செய்வது. இவ்வாறு மத்திய அரசு தொடர்ந்து நம்மை வஞ்சிக்கிறது, நாமும் போராடிக் கொண்டே இருக்கிறோம். நாம் உரிமையை கேட்பதையே ‘அற்ப சிந்தனை’ என்கிறார் மத்திய அமைச்சர். மத்திய அரசில் இருப்பவர்களுக்கு மனசாட்சி இருக்கிறதா.

திமுக கூட்டணி கட்சிகளின் கருத்துகளை ஆலோசனையாகத்தான் பார்க்கிறேன். முரண்பாடாக நினைப்பது இல்லை. கருத்து வேறுபாடுகள் எங்கும் இருக்கும். கருத்து சொல்வது, ஜனநாயகப்பூர்வமான உறவின் அடையாளம். கடந்த 2019ல் இருந்து ஒன்றாக சேர்ந்து தேர்தல் களத்தை சந்தித்து வருகிறோம். பாஜகவை எதிர்த்து வெற்றி பெறுவதில், நாட்டுக்கே எடுத்துக்காட்டாக இருப்பது திமுக தலைமையிலான கூட்டணிதான். கருத்து முரண்பாடுகளால் எங்கள் நட்புறவில் எந்த பாதிப்பும் இல்லை.

‘டெல்லி தேர்தல் முடிவுகள் இண்டியா கூட்டணிக்கு சம்மட்டி அடி’ என்று எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி விமர்சிக்கிறார். பாஜக அறிக்கைகள் போலதான் அவரது அறிக்கைகள் இருக்கும். அவரது குரலே, பாஜகவுக்கான டப்பிங் குரல்தான். கள்ளக் கூட்டணி என்று சொல்வதை அவர் நிரூபிக்கிறார். இதையெல்லாம் பேசுவதற்கு முன்பு, அவர் தனது தோல்விகளை பற்றி யோசிக்க வேண்டும்.

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் உடனே நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் கைது செய்யப்படுகின்றனர். பாலியல் குற்றங்களுக்கு இன்னும் கடுமையான தண்டனைகள் வழங்க சட்டப்பேரவையில் சட்டம் கொண்டு வந்துள்ளேன். சிறப்பு நீதிமன்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. விரைவாக தண்டனை வாங்கி தரப்படுகிறது.

மணிப்பூர் மாநிலம் 2 ஆண்டுகளாக பற்றியெரிந்தது. 220 பேருக்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். முதல்வர் பிரேன் சிங் மீது நடவடிக்கை எடுக்காமல் மத்திய அரசு பத்திரமாக பாதுகாத்து வைத்தது. நடந்த வன்முறையின் பின்னணியில் மாநில முதல்வரே சம்பந்தப்பட்டுள்ளார் என்று, அவர் பேசிய ஆடியோ வெளியாகியுள்ளது. அதுபற்றி விசாரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கூட்டணி கட்சியும், பாஜக எம்எல்ஏக்களுமே அவருக்கு எதிராக திரும்பியுள்ளனர். தற்போது அவர் தானாக பதவி விலகவில்லை. வேறு வழியின்றி அவரை ராஜினாமா செய்ய வைத்து, குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தி உள்ளனர். இது மிகவும் தாமதமான முடிவு.

பாஜக ஆளும் மணிப்பூரோ, உத்தர பிரதேசமோ, இந்த அளவில்தான் சட்டம் - ஒழுங்கு இருக்கிறது. இந்த லட்சணத்தில் இவர்கள் அடுத்த மாநிலத்தை பற்றி கூச்சமின்றி பேசுகின்றனர். மணிப்பூரில் விரைவில் அமைதி திரும்ப வேண்டும், மக்களை காக்கும், மக்கள் விரும்பும் மக்களாட்சி அமைய வேண்டும். இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE