பள்ளிச் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: ரூ.1 கோடி இழப்பீடு வழங்க புதுச்சேரியின் 18 மீனவ கிராம பிரதிநிதிகள் வலியுறுத்தல்

By அ.முன்னடியான்

புதுச்சேரி: புதுச்சேரி தவளக்குப்பம் அருகே தானம்பாளையம் தனியார் மேல்நிலைப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வரும் 6 வயது சிறுமி பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டார். அதிர்ச்சியும் ஆவேசமும் அடைந்த உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் நேற்று மாலை பள்ளியை சூறையாடி, தவளக்குப்பம் நான்குமுனை சந்திப்பில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சுமார் 6 மணி நேரத்துக்கும் மேலாக இந்த சாலை மறியல் போராட்டம் நீடித்தது. இதனால் கடலூர்-புதுச்சேரி சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. அப்பகுதியில் பதற்றமான சூழலும் நிலவியது. இச்சம்பவம் தொடர்பாக தவளக்குப்பம் போலீஸார் தனியார் பள்ளி ஆசிரியர் மணிகண்டன் (25) மீது போக்சோ பிரிவில் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

இந்நிலையில், பாலியல் சீண்டலால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நியாயம் கிடைக்க வேண்டுமென வலியுறுத்தி, புதுச்சேரியைச் சேர்ந்த 18 மீனவ கிராம பிரதிநிதிகளின் ஆலோசனைக் கூட்டம் நேற்று (பிப்.15) நடைபெற்றது.

கூட்டத்தில் காவல்துறை எஸ்பிக்கள் வீரவல்லவன், மற்றும் பக்தவச்சலம் ஆய்வாளர்கள் கலைச்செல்வன், கணேசன், மற்றும் சஜித் ஆகியோரும் கலந்து கொண்டனர். சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற மீனவர்களின் ஆலோசனை கூட்டத்தில் புதுச்சேரி அரசை வலியுறுத்தி ஏழு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியருக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும், பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர்களை தாக்கிய காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,

பள்ளியின் தாளாளர், பள்ளி முதல்வர் மற்றும் சம்பந்தப்பட்ட அனைவரின் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும், நடுநிலையான குழு அமைத்து இந்த பள்ளியில் இதற்கு முன்பு இது போன்ற வேறு ஏதாவது சம்பவங்கள் நடந்திருக்கிறதா? என்பதனை ஆய்வு செய்ய வேண்டும்,

எதிர்காலத்தில் மாணவ, மாணவிகள் இதுபோல் பாதிக்காத வகையில் அரசு போர்க்கால நடவடிக்கை எடுத்து இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் ஆகிய 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து தீர்மான நகல்களை காவல்துறை எஸ்பிக்களிடம் மீனவ பிரதிநிதிகள் வழங்கினர்.

இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், இந்த தீர்மானத்தின் அடிப்படையில் புதுச்சேரி அரசு நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் மீனவ கிராமங்களை ஒன்று திரட்டி மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம் என்றனர்.

இதனிடையே சிறுமியிடம், பள்ளி ஆசிரியர் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சம்பவத்தை கண்டித்தும், சிறுமிக்கு நியாயம் கிடைக்க வலியுறுத்தியும், ஆசிரியருக்கு சரியான தண்டனை வாங்கி கொடுக்கக்கோரியும் மூர்த்திக்குப்பம், புதுக்குப்பம் உள்ளிட்ட மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் படகுகளை கரைகளில் வரிசையாக நிறுத்தி வைத்துவிட்டு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

மாணவிகளிடம் ஆசிரியர் மணிகண்டன் கெடுபிடி: ஒன்றாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் மணிகண்டன் மாணவிகளிடம் கெடுபிடியாக நடந்து கொண்டுள்ளார். அவர் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவிகளுக்கும் பாடம் நடத்தி வந்த நிலையில், அவர்களது புத்தகங்களில் பாலியல் ரீதியாகவும், மாதவிடாய் குறித்தும் குறிப்பு எழுதி இருந்ததாக கூறப்படுகிறது. தற்போது இந்த தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE