“விஜய்க்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்கலில் பாஜகவின் உள்நோக்கம்...” - மார்க்சிஸ்ட்

By KU BUREAU

ராமநாதபுரம்: “தவெக தலைவர் நடிகர் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கியுள்ளது, பாஜக அரசு உள்நோக்கத்தோடு பிரதிபலனை எதிர்பார்த்து வழங்கப்பட்டது போல் தெரிகிறது” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம் கருத்து தெரிவித்துள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டுக்கு ராமநாதபுரம் மாவட்ட வரவேற்பு குழு அமைப்பு கூட்டத்துக்கு வருகை தந்த மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “சிவகங்கை மாவட்டம் மேலபிடாவூரில் பட்டியல் இன இளைஞர் புல்லட் இருசக்கர வாகனம் ஓட்டியதற்காக சாதி வெறியர்களால் அவரது கைகள் வெட்டப்பட்டுள்ளன.

தொடர்ந்து பட்டியல் இன மக்கள் பாதிக்கப்படுவது தமிழகத்துக்கு இழுக்கு. தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் சாதிய வன்கொடுமை வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க வேண்டும். உரிய காலத்தில் இதுபோன்ற வழக்குகளை விசாரணை செய்து கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும்.

ஆசிரியர்கள், அரசு பணியாளர்கள் பாலியல் வன்கொடுமைகளைில் ஈடுபட்டால் பணியிலிருந்து நிரந்தரமாக நீக்க வேண்டும். கல்வி நிலையங்களில் கல்வித் துறை உயர் அதிகாரிகள் இதுபோன்ற சம்பவங்களில் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தவெக தலைவர் நடிகர் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கியுள்ளது, பாஜக அரசு உள்நோக்கத்தோடு பிரதிபலனை எதிர்பார்த்து வழங்கப்பட்டது போல் தெரிகிறது. அதிமுக இன்னும் பல அணிகளாக உடைவதற்கு வாய்ப்பு உள்ளது” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE