திமுகவின் விளம்பர அரசியல்தான் ‘பெற்றோரை கொண்டாடுவோம்’ மாநாடு: சீமான்

By KU BUREAU

சென்னை: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ள ‘பெற்றோரை கொண்டாடுவோம்’ மாநாட்டுக்கு நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், திமுகவின் வெற்று விளம்பர அரசியல் இது என்று அவர் சாடியுள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்த அறிக்கையில், “கடலூர் மாவட்டம், திருப்பெயர் கிராமத்தில் தமிழக முதல்வர் பங்கேற்கும் 'பெற்றோரைக் கொண்டாடுவோம்' என்ற மாநாட்டுக்காக 7 மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளி மாணவர்களின் பெற்றோரை வலுக்கட்டாயமாக அழைத்துவர பள்ளி ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டுள்ள தமிழக அரசின் செயல் வன்மையான கண்டனத்துக்குரியது.

பெற்றோரைக் கொண்டாட வேண்டும் என்றால் அதனை அந்தந்த ஊர்களில் உள்ள பள்ளிகளிலேயே பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் செய்யலாமே? இல்லாவிட்டால் ஒவ்வொரு பள்ளிக்கும் முதல்வர் உள்ளிட்டோர் நேரில் செல்ல வேண்டும். இப்படி ஒரு மாநாடு நடத்தி தங்களை அலைக்கழிக்க வேண்டும் என்பது மாணவர்கள், பெற்றோர்களின் கோரிக்கையா? அல்லது திமுகவின் தேர்தல் பிரச்சாரத் திட்டத்தின் முன்னோட்டமா?

இந்த மாநாட்டால் பெற்றோருக்கும், ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் விளையப்போகும் நன்மையென்ன? பள்ளிகளின் உட்கட்டமைப்பைச் செம்மைப்படுத்தி, கல்வியின் தரத்தை உயர்த்தி, மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துவதுதான் தமிழக அரசு பெற்றோருக்குத் தரும் உண்மையான பாராட்டும், மரியாதையுமாகும்.

அதைவிடுத்து, திமுகவின் வெற்று விளம்பர அரசியலுக்காக மாணவர்களையும், பெற்றோரையும் வலுக்கட்டாயப்படுத்தி வாட்டி வதைப்பதென்பது கொடுங்கோன்மையாகும். இதை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும்’ என்று சீமான் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE