ஆலந்தா கிராம மக்கள் அடுத்தடுத்து கைது - ஆட்சியர் தடை செய்த கல் குவாரிக்கு போலீஸ் ஆதரவா?

By KU BUREAU

கோவில்பட்டி: ஓட்டப்பிடாரம் அருகே ஆலந்தா கிராமத்தில் செயல்பட்டு வந்த கல்குவாரிக்கு மாவட்ட ஆட்சியர் தடை விதித்துள்ள நிலையில், குவாரிக்கு எதிராக போராடிய கிராம மக்கள் அடுத்தடுத்து கைது செய்யப்படுவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் இரவு 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், காவல் நிலையத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே உள்ள ஆலந்தா கிராமத்தில் செயல்பட்டு வந்த தனியார் கல்குவாரியை மூடக்கோரி அனைத்து கட்சியினரும், கிராம பொதுமக்களும் போராட்டம் நடத்தினர். இதைத் தொடர்ந்து அந்தக் கல்குவாரியை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதனால், அந்த கிராமத்தினருக்கும், கல்குவாரி ஆதரவாளர்களுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு, இரு தரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இருதரப்பினரையும் புளியம்பட்டி போலீஸார் சமாதானப்படுத்தினர்.

இந்நிலையில், கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த ஆலந்தா கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சுடலைமணியை, கடந்த 6-ம் தேதி சிலர் வலுக்கட்டாயமாக காரில் ஏற்றிச் சென்றனர். அவர் மணியாச்சி காவல் நிலையத்தில் இருப்பதை அறிந்த கிராம மக்கள், அங்கு திரண்டு சென்றனர். பொதுமக்களைக் கண்டவுடன் போலீஸார் காவல் நிலையத்தில் இருந்து சுடலைமணியை வெளியே அனுப்பினர்.

சுடலைமணியை கைது செய்த போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, கிராம பொதுமக்கள் சவலாப்பேரியில் கடந்த 7-ம் தேதி சாலை மறியல் போராட்டம் நடத்தினர். மணியாச்சி டிஎஸ்பி குரு வெங்கட்ராஜ், கோவில்பட்டி டிஎஸ்பி ஜெகநாதன் ஆகியோர் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில், இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். அதன்பேரில், போராட்டம் கைவிடப்பட்டது.

இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை ஆலந்தா கிராமத்தைச் சேர்ந்த சுடலைமணி, முருகன், கசமுத்து ஆகியோர் தூத்துக்குடிக்கு ஆட்டோவில் சென்றனர். பின்னர், அவர்களின் மொபைல் போன் சுவிட்ச் ஆப் செய்திருப்பதை அறிந்த கிராம பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதனால், ஆலந்தா கிராம பொதுமக்கள் நேற்று முன்தினம் இரவு புளியம்பட்டி காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

அப்போது, சுடலைமணி, முருகன், கசமுத்து ஆகியோர் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து தரக் கோரி, சுடலைமணியின் மகன் முருகன், அவரது உறவினரான அதே ஊரைச் சேர்ந்த முருகேசன் மகன் சுடலைமணி ஆகிய இருவரும் புளியம்பட்டியில் உள்ள செல்போன் டவரில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவில்பட்டி டிஎஸ்பி ஜெகநாதன் அங்கு வந்து, ‘ஆலந்தா கல்குவாரியில் வேலை பார்க்கும் சுந்தரராஜ் என்பவரை தாக்கியதாக, அவர் கொடுத்த புகான் பேரில் சுடலைமணி, முருகன், கசமுத்து ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால், நீதிமன்றத்தை அணுகுங்கள்’ என தெரிவித்தார். இரவு 11.30 மணி வரை போராட்டம் நடத்திய கிராம மக்கள் பின்னர் கலைந்து சென்றனர். இப்போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE