விமான பயணிகள் அணிந்துவரும் தங்க நகைக்கு சுங்கவரி விதிக்க முடியாது என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை

By KU BUREAU

சென்னை: விமான பயணிகள் அணிந்து வரும் தாலி, வளையல் போன்ற தங்க நகைகளுக்கு சுங்கவரி விதிக்க முடியாது என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் நிபந்தனையுடன் தடை விதி்த்தனர். விமானம் மூலமாக சென்னை திரும்பி இளம்பெண், தனது கைகளில் 135 கிராம் எடையுள்ள 10 தங்க வளையல்களை அணிந்து வந்ததாகக்கூறி அவற்றை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதேபோல இலங்கையில் இருந்து வந்த புதுமணப்பெண் அணிந்திருந்த 88 கிராம் எடையுள்ள தாலிச்செயினையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதுபோல பெண்கள் அணிந்து வரும் தங்க நகைகளுக்கு சுங்கவரி விதிக்க முடியாது என சமீபத்தில் உத்தரவிட்டிருந்த தனி நீதிபதி, அந்த நகைககளை சம்பந்தப்பட்டவர்களிடம் திருப்பி ஒப்படைக்க வேண்டுமென அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியிருந்தார். மேலும் தாலியை பறிமுதல் செய்தசுங்கத்துறை பெண் அதிகாரி மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பரிந்துரை செய்திருந்தார். தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து சுங்கத்துறை தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், சி.சரவணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சுங்கத்துறை தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், ‘‘ரூ.50 ஆயிரம் மதிப்புக்கு மேல் கொண்டு வரப்படும் பொருட்கள் விமான பயணிகளின் உடைமைகளாகவே கருதப்பட்டு சுங்கவரி வசூலிக்கப்பட வேண்டும் எனசட்டத்தில் உள்ளது.

பயணிகள் உடலில் அணிந்துள்ள நகைகளை உடைமைகளாக கருத முடியாது என்றால் அதுநாட்டின் பொருளாதாரத்தையே பாதிப்புக்குள்ளாக்கும். விமான பயணிகள் எவ்வளவு கிலோ நகைகளை யும் இந்தியாவுக்குள் கொண்டுவர முடியும் என்ற கள்ளச்சந்தைக்கும் வித்திட்டுவிடும். எனவே தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடைவிதிக்க வேண்டும்’ என வாதிட்டார்.

அதையேற்ற நீதிபதிகள், இதுதொடர்பாக தனி நீதிபதி பிறப்பித்துள்ள உத்தரவுக்கு தடைவிதித்து, பறிமுதல் செய்யப்பட்ட நகைகளுக்கு ஈடாக பிணை அல்லது உத்தரவாதம் பெற்று அவற்றை சம்பந்தப் பட்டவர் களுக்கே திரும்ப வழங்க வேண்டும், என நிபந்தனை விதித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE