தமிழகத்தில் எங்கும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
1998-ல் கோவையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் உயிரிழந்த 58 பேருக்கு 27-ம் ஆண்டு புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி ஆர்.எஸ். புரம் அஞ்சல் நிலையம் அருகே நேற்று நடைபெற்றது. பாஜக தேசிய இளைஞரணி தலைவர் தேஜஸ்வி சூர்யா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
நிகழ்வில் அண்ணாமலை பேசியதாவது: கோவையில் 2022-ம் ஆண்டு நடைபெற்றது தீவிரவாத தாக்குதல். ஆனால் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் என தொடர்ந்து முதல்வர் தெரிவித்து வருகிறார். தமிழகத்தில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு பேருந்து, பள்ளி, கல்லூரி என எங்கும் பாதுகாப்பு இல்லை. காவல் துறையில் பணியாற்றும் பெண் காவலருக்கே பாதுகாப்பு இல்லை.
அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு முக்கிய காரணமான தீவிரவாதியை இந்தியா கொண்டு வர அதிபர் டிரம்ப்பிடம் அனுமதி பெற்றுள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் தீவிரவாதிகள் எங்கு இருந்தாலும் வேட்டையாடி கொண்டு வருவோம்.
» ரொமான்டிக் காமெடியாக உருவாகும் ‘ஹார்ட்டின்’
» திருமாநிலையூரில் அமைகிறது கரூர் புதிய பேருந்து நிலையம் - உயர் நீதிமன்றம் பச்சைக்கொடி
பாஜக ஒரு சமுதாயத்துக்கான கட்சி அல்ல. இந்திய கலாச்சாரத்துக்கு ஆதரவான கட்சியாகும். அனைவரும் மே 21-ம் தேதி பயங்கரவாதத்துக்கு எதிரான சங்கல்பத்தை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் எம்எல்ஏ பேசும்போது, “குண்டுவெடிப்பு சம்பவம் கோவை வளர்ச்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இந்து மதம் பிரிவினையை ஏற்படுத்துகிறது என்று உலகில் எங்கு சென்று கூறினாலும் யாரும் நம்ப மாட்டார்கள்” என்றார்.
இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், பாஜக மாநில துணைத் தலைவர் பேராசிரியர் கனகசபாபதி, பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், பொதுச் செயலாளர் முருகானந்தம், மாவட்ட தலைவர் ரமேஷ்குமார், ஆர்எஸ்எஸ் மாநகர தலைவர் ராஜா உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.