ராமேசுவரம்: பாம்பன் புதிய ரயில் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார் என தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தெரிவித்துள்ளார்.
நூற்றாண்டு பழமை வாய்ந்த பாம்பன் ரயில் பாலத்தில் அடிக்கடி ஏற்பட்ட தொழில்நுட்பப் பிரச்சினைகள் மற்றும் தூக்குப் பாலத்தில் விரிசல் விழுந்ததாலும், பழைய பாலம் அருகிலேயே புதிய ரயில் பாலம் கட்டுவதற்காக 01.03.2019-ல் பிரதமர் நரேந்திர மோடி புதிய பாம்பன் பாலம் அமைப்பதற்காக காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார். இந்த புதிய ரயில் பாலம் மற்றும் ராமேசுவரம் ரயில் நிலைய மேம்பாட்டு பணிகளினால் கடந்த 26 மாதங்களாக ராமேசுவரத்திற்கு ரயில் சேவை நிறுத்தப்பட்டு, மண்டபம் வரையிலும் தான் ரயில்கள் இயக்கப்படுகின்றன.
பாம்பன் புதிய பாலத்தின் பணிகள் முற்றிலும் நிறைவடைந்து தற்போது மண்டபத்திலிருந்து பராமரிப்பு பணிகளுக்காக பயணிகள் இல்லாமல் காலி ரயில் பெட்டிகள் பாம்பன் புதிய ரயில் பாலம் வழியாக ராமேசுவரம் ரயில் நிலையத்திற்கு பராமைரிப்பு பணிகளுக்காக தினந்தோறும் கொண்டு செல்லப்படுகின்றன. இந்நிலையில், பாம்பனில் கட்டப்பட்டுள்ள புதிய ரயில் பாலம், ராமேசுவரம் ரயில் நிலைய மேம்பாட்டுப் பணிகளை தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வு குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, “ராமேசுவரம் ரயில் நிலைய மேம்பாட்டு பணிகள 60 சதவீதம் நிறைவடைந்துள்ளது. முழுமையாக பணிகள் நிறைவடைந்து ஆகஸ்ட் மாதம் ராமேசுவரம் ரயில் நிலையம் திறப்பதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பாம்பன் புதிய ரயில் பாலம் திறப்பு விழா ஒரு மாதத்திற்குள் நடைபெறும். திறப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். திறப்பு விழாவிற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும்.
» நீலகிரி மாவட்டத்தில் 85 அரசு பள்ளிகளை மூடும் திராவிட மாடல் அரசு: எல்.முருகன் கண்டனம்
» ராமநாதபுரம் அருகே அரசு பேருந்து - கார் நேருக்கு நேர் மோதி விபத்து: 3 பேர் உயிரிழப்பு
பழைய பாம்பன் ரயில் தூக்குப் பாலம் பாதுகாப்பான முறையில் அகற்றப்பட்டு அதனை காட்சிப்படுத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது. பாம்பன் புதிய ரயில் பாலம் திறந்த பின்னர் ராமேசுவரத்திற்கு கூடுதல் ரயில்கள் இயக்கப்படுவது மற்றும் அதி விரைவு ரயில்கள் மண்டபம் மற்றும் பரமக்குடி ரயில் நிலையங்களில் நின்று செல்வது குறித்து பரிசீலிக்கப்படும்” என்றார்.