வேலூர்: அப்துல்லாபுரம் அருகே ஆட்டோவில் இருந்து தவறி விழுந்த பள்ளி மாணவர் உயிரிழந்தது குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
வேலூர் சேண்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் மாரி. கூலி தொழிலாளி. இவரது மகன் சஞ்சய் (13). இவர், வேலூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை சஞ்சய் அதே பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான அசோக்குமார் என்பவரின் ஆட்டோவில் வேலூரில் இருந்து குடியாத்தம் நோக்கி ஓட்டுநர் இருக்கைக்கு அருகில் அமர்ந்தபடி சென்றுள்ளார்.
இந்த ஆட்டோ அப்துல்லாபுரம் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் அருகே சென்றபோது, சஞ்சய் ஓடும் ஆட்டோவில் இருந்து தவறி சாலையில் விழுந்துள்ளார். இதில், தலையில் பலத்த காயம் அடைந்த சஞ்சய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்த தகவலறிந்த விரிஞ்சிபுரம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.