வேலூர் அருகே கோஷ்டி மோதலை தடுக்கச் சென்ற கட்டிட மேஸ்திரி பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் உயிரிழந்தார். இதையடுத்து, அடிதடி வழக்கை கொலை வழக்காக மாற்றி காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
வேலூர் அடுத்த செம்பேடு பகுதியைச் சேர்ந்தவர் சுகுமார் (52). இவரது சகோதரர் மூர்த்தி (46). இருவரும் விவசாயிகள். இவர்களுக்கு இடையே வீட்டுமனை தொடர்பாக பிரச்சினை இருந்து வந்துள்ளது. கடந்த 10-ம் தேதி இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு கைகலப்பாக மாறியது. இதில், இருதரப்பினரும் மாறிமாறி தாக்கிக் கொண்டனர். இதில், சுகுமாருக்கு தலை, தோள்பட்டை, காலில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரது உறவினர் முரளி, பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்த கட்டிட தொழிலாளியான விஷ்ணு (33) ஆகியோரும் பலத்த காயமடைந்தனர்.
இதேபோல், மூர்த்தி தரப்பில் அவரது மகன் தினேஷ், மனைவி மல்லிகா, மற்றொரு மகன் கோகுல் ஆகியோருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. காயமடைந்தவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த மோதல் தொடர்பாக இருதரப்பினர் மீதும் அரியூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இதற்கிடையில், வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விஷ்ணு என்பவர் நேற்று உயிரிழந்தார்.
இதையடுத்து, இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்த விஷ்ணுவுக்கு ராதிகா என்ற மனைவியும், தேவா (8), லியா (6) என்ற 2 குழந்தைகளும் உள்ளனர். இருதரப்பு மோதல் சம்பவத்தை தடுக்கச் சென்றபோது விஷ்ணுவுக்கு காயம் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார் என காவல் துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.