இளைஞர் மரணத்தில் சந்தேகம்: திருப்பத்தூர் நகர காவல் நிலையம் முற்றுகை

By KU BUREAU

இளைஞர் மரணம் குறித்து அளிக்கப்பட்ட புகார் மீது காவல் துறையினர் விசாரணை நடத்தாததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தை நேற்று முற்றுகையிட்டனர்.

திருப்பத்தூர் கவுதம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் (32), இவர், தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், கடந்த 5ம் தேதி இரவு சுரேஷ்குமார் தனது வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்தார்.

இதுகுறித்து அவரது தாயார் பிரேமா கடந்த 10-ம் தேதி திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் சுரேஷ்குமார் மரணத்துக்கு காரணம் என்ன ? அதில் தொடர்புடையவர்கள் யார் ? என்பதை கண்டறிந்து அவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தார். இந்த புகார் மனு மீது நகர காவல் துறையினர் எந்த ஒரு விசாரணையும் நடத்தவில்லை என கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த கவுதம்பேட்டையைச் சேர்ந்த பொதுமக்கள் திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தை நேற்று திடீரென முற்றுகை யிட்டனர். அப்போது, சுரேஷ்குமார் மரணத்துக்கு காரணமானவர்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அங்குள்ள காவலர்களிடம் பொதுமக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு சிறிதுநேரம் சலசலப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, அவர்களை சமாதானம் செய்த நகர காவல் துறையினர் கவுதம்பேட்டை பொதுமக்களை துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, பொதுமக்களுடன் துணை காவல் கண்காணிப்பாளர் ஜெகன்நாதன் பேச்சுவார்த்தை நடத்தினார். பிறகு, சுரேஷ்குமார் மரணம் குறித்து அடுத்த 3 நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதியளித்தார். இதையடுத்து, பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதுகுறித்து சுரேஷ்குமாரின் உறவினர்கள் கூறும்போது, ”உயிரிழந்த சுரேஷ்குமாரை மடவாளத்தைச் சேர்ந்த திருமணமான ஒரு பெண் மிரட்டி பணம், நகைகளை வாங்கி ஏமாற்றி வந்துள்ளார். அதற்கு, அந்த பெண்ணின் குடும்பத்தாருக்கும் முக்கிய பங்கு உண்டு. சுரேஷ்குமாரிடம் தொடர்ந்து நகை, பணத்தை கேட்டு அந்த பெண்ணின் குடும்பத்தினர் கொலை மிரட்டல் விடுத்து வந்ததாக தெரிகிறது. இதனால், சுரேஷ்குமார் மரணத்தில் எங்களுக்கு பெரிய சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக விசாரணை நடத்த காவல் நிலையத்தில் புகார் அளித்தும் காவல் துறையினர் புகார் மனு மீது இதுவரை நடவடிக்கை எடுக்காததால் காவல் நிலையத்தை முற்றுகையிட்டோம். திருப்பத்தூர் துணை காவல் கண்காணிப்பாளர் 3 நாட்களில் விசாரணை நடத்தப்படும் என உறுதியளித்துள்ளார். இதனையேற்று, அங்கிருந்து நாங்கள் கலைந்து செல்கிறோம்” என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE