திருச்சி மாநகரில் பரபரப்பு: பல்வேறு வழக்குகளில் 5 ரவுடிகள் அதிரடி கைது

By KU BUREAU

திருச்சி: பாலக்கரை முதலியார் சத்திரம் நடுத்தெருவை சேர்ந்த சரித்திர பதிவேடு ரவுடியான மணிகண்டன் (24). இவர் பொன்மலைப்பட்டி, பாலக்கரை பகுதியில் பணம், செல்போனை வழிப்பறி செய்ததாக பாலக்கரை, பொன்மலை போலீஸார் வழக்குப் பதிவு செய்து, மணிகண்டனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

விமான நிலைய பகுதி அண்ணாநகரைச் சேர்ந்த ரவுடியான சிவா என்கிற சிவநேசன் (28) என்பவரை இருசக்கர வாகனத்தை திருடியதாக விமான நிலைய போலீஸார் கைது செய்து, இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

திருவானைக்காவல் கொண்டையம் பேட்டை பகுதியை சேர்ந்த ரவுடியான அய்யப்பன் என்கிற அரவிந்த் (29), மேலசிந்தாமணி பகுதியை சேர்ந்த ரவுடி விஜய் என்கிற பாண்ட விஜய் (24) ஆகியோர் கத்தியைக் காட்டி மிரட்டியதாக போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.

மேலும், தென்னூர் ஆழ்வார்தோப்பு காஸ் குடோன் பகுதியில் மது விற்பனையில் ஈடுபட்ட ரவுடி மாலிக்பாட்சா (26) என்பவரை தில்லைநகர் போலீஸார் கைது செய்து, அவரிடம் இருந்த மது பாட்டில், இருசக்கர வாகனம், பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE