சென்னிமலையில் தெருநாய்கள் கடித்து 18 ஆடுகள் உயிரிழப்பு: விவசாயிகள் சாலை மறியல் போராட்டம்

By KU BUREAU

ஈரோடு: சென்னிமலை அருகே தெரு நாய்கள் கடித்து 18 ஆடுகள் உயிரிழந்த நிலையில், இறந்த ஆடுகளுடன் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சென்னிமலை அருகே ராமலிங்கபுரம் தட்டாங்காட்டை சேர்ந்தவர் நல்லசிவம் (58). இவர் தனது தோட்டத்தில் 29 செம்மறி ஆடுகளை வளர்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு, ஆடுகளை பட்டியில் அடைத்துவிட்டு வீட்டுக்குச் சென்று விட்டார்.

ஆட்டுப்பட்டிக்கு நேற்று காலை சென்ற போது, நாய்கள் கடித்து 18 ஆடுகள் உயிரிழந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதோடு, 7 ஆடுகள் உயிருக்கு போராடிய நிலையில் இருந்தன. இது குறித்த தகவல் அறிந்த அப்பகுதி விவசாயிகள் ஒன்று கூடினர். இறந்த ஆடுகளுடன் ராமலிங்கபுரம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். சென்னிமலை போலீஸார் மற்றும் வருவாய் துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை.

இந்நிலையில், நொய்யல் ஆற்றின் வலது கரையில் திருப்பூர் மாவட்ட பகுதியில் ஏற்கெனவே தெரு நாய்களால் ஆடுகளை இழந்த விவசாயிகளும் போராட்டத்தில் இணைந்தனர். இவர்கள் அனைவரும், உயிரிழந்த ஆடுகளுடன் சென்னிமலை - காங்கேயம் சாலையில் திட்டுப்பாறை பகுதிக்கு சென்று அங்கு மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் அந்த வழியே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சென்னிமலையில் இருந்து காங்கேயம் மற்றும் அங்கிருந்து சென்னிமலைக்கு வரும் வாகனங்கள் அனைத்தும் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டன. நேற்று மாலை வரை மறியல் போராட்டம் தொடர்ந்தது.

சென்னிமலை, பெருந்துறை காஞ்சிகோவில் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் கடித்து ஆடுகள் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. இப்பிரச்சினைக்கு தீர்வு காண அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE