மதுரை: நீர்நிலை ஆக்கிரமிப்பில் கட்டப்பட்டுள்ள திமுக அலுவலகக் கட்டிடத்தை, தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பட்டா இடத்துக்கு நகர்த்த 2 மாத காலஅவகாசம் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த திமுக நிர்வாகி ரவீந்திரன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில்: “மதுரை மாநகர் பீ.பி.குளம் கண்மாயை ஒட்டி முல்லை நகரில் உள்ள ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இப்பகுதியில் திமுக அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகம் கடந்த 30 ஆண்டுகளாக உள்ளது. அலுவலகம் அமைந்திருக்கும் பகுதி மதுரை மாநகராட்சி இடமாகும். மாநகராட்சிக்கு முறையாக தற்போது வரை வரி செலுத்தி வருகிறோம்.
இந்நிலையில், திமுக அலுவலகம் ஆக்கிரமிப்பு இடத்தில் உள்ளதாகக் கூறி இடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மாநகராட்சி இடத்தில்தான் அலுவலகம் அமைந்துள்ளது. இதனால் திமுக கட்சி அலுவலக கட்டிடத்தை இடிக்க தடை விதித்து உத்தரவிட வேண்டும்” இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் திமுக அலுவலகக் கட்டிடத்தை தாங்களே அகற்றுவதாக தெரிவிக்கப் பட்டது. இதையடுத்து, அலுவலகக் கட்டிடத்தை அகற்றிவிட்டு, அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்நிலையில், வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கட்சி அலுவலகக் கட்டிடத்தை பட்டா நிலத்தில் நகர்த்தி வைக்க 2 மாத கால அவகாசம் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், மனுதாரருக்கு 2 மாத கால அவகாசம் வழங்கப்படுகிறது. மீண்டும் ஒருமுறை கால அவகாசம் வழங்கப்படாது. மனு முடிக்கப்படுகிறது என உத்தரவிட்டனர்.