தமிழுக்கு முதலிடம் அளிக்காத நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை: அமைச்சர் சாமிநாதன் எச்சரிக்கை

By KU BUREAU

கடைகள், வணிக நிறுவனங்களில் வைக்கப்பட்டுள்ள பெயர் பலகைகளில் தமிழுக்கு முதலிடம் அளிக்காத நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று, செய்தி மற்றும் தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நீலகிரி மாவட்டம் உதகை சட்டப்பேரவைத் தொகுதியில், நடைபெற்றுவரும் வளர்ச்சி திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து, பல்வேறு துறை சார்ந்த அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம், உதகையிலுள்ள தமிழக மாளிகையில் நேற்று நடைபெற்றது. செய்தி மற்றும் தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமை வகித்தார். அரசு தலைமை கொறடா கா.ராமச்சந்திரன், மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பின்னர் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசும்போது, "உதகை சட்டப்பேரவைத் தொகுதியில் மேற்கொள்ளப்பட்டுவரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளின் முன்னேற்றம் மற்றும் தற்போதைய நிலை குறித்து ஆய்வுக் கூட்டம் மேற்கொள்ளப்பட்டது. பெரும்பாலான பணிகள் உரிய நேரத்தில் முடிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, கலைஞர் கனவு இல்லம் உள்ளிட்ட திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் நடைபெற்றுவரும் அனைத்து பணிகளையும் விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.

நீர்வள ஆதாரத் துறை சார்பில், உதகை ஏரியில் நடைபெற்றுவரும் தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்கவும், தூர்வாரும்போது கிடைக்கும் வண்டல் மண்ணை விவசாயிகளுக்கு வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதா என்பதையும் ஆராய்ந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மக்கள் பயனடையும் வகையில் அனைத்து அரசு திட்டங்களையும் உரிய காலத்துக்குள் முடித்து, பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்" என்றார்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ்.நிஷா, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) கௌசிக், மாவட்ட வன அலுவலர் கௌதம், வருவாய் அலுவலர் நாராயணன், குன்னூர் சார் ஆட்சியர் சங்கீதா, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் கீதாஞ்சலி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

முன்னதாக, உதகை சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட திமுக நிர்வாகிகள் கூட்டம், நீலகிரி மாவட்ட பொறுப்பு அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் பா.மு.முபாரக் வரவேற்றார். உதகை தொகுதி பார்வையாளர் தென்றல் செல்வராஜ் முன்னிலை வகித்தார். கட்சி வளர்ச்சி, 2026 தேர்தல் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

பின்னர் அமைச்சர் பேசும்போது, "கடைகள், வணிக நிறுவனங்கள், தங்கும் விடுதிகள், தொழிற்சாலைகளில் வைக்கப்பட்டுள்ள பெயர் பலகைகளில் தமிழுக்கு முதலிடம் அளிக்காத நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். பெரும்பாலான அரசு பேருந்துகளில் திருக்குறள் எழுத்துக்கள் அழிந்துள்ளதை கவனத்தில் கொண்டு, அனைத்தும் போக்குவரத்து துறை மூலமாக புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE