சமக்ர சிக்ஷா திட்டத்தின் மூலம் மத்திய அரசு வழங்கிய ரூ.1,050 கோடி எங்கே? - தமிழக அரசுக்கு அண்ணாமலை கேள்வி

By KU BUREAU

சமக்ர சிக்ஷா திட்டத்தின் மூலம் மத்திய அரசு தமிழகத்துக்கு வழங்கிய ரூ.1,050 கோடி நிதி எங்கே சென்றது என அமைச்சர் அன்பில் மகேசுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பிரதமர் மோடி குழந்தைகள் அனைவருக்கும் தரமான, சமமான கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில், கடந்த 2018-2019-ம் ஆண்டு, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி (சமக்ர சிக்ஷா) திட்டத்தைக் கொண்டு வந்தார். இந்தத் திட்டத்தின் சிறப்பம்சங்களில் ஒன்றான, தகவல் தொடர்பு தொழில்நுட்பக் கல்வி தொடர்பாக, சில விதிமுறைகளை மத்திய அரசு வகுத்துள்ளது.

இதன்படி, அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும், ஆறாம் வகுப்பிலிருந்து, 12-ம் வகுப்பு வரையிலான மாணவ மாணவியர்களுக்கு, தகவல் தொடர்பு தொழில்நுட்பம், தனிப் பாடமாக இடம்பெற வேண்டும் என்றும், இதற்காக, ஒவ்வொரு பள்ளிகளிலும், தகவல் தொடர்பு தொழில்நுட்பம்(ஐசிடி) ஆய்வகங்கள் அமைக்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதன்படி, கடந்த 3 ஆண்டுகளில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், தகவல் தொடர்பு தொழில்நுட்பக் கல்வி பாடத்திட்டத்துக்காக, மத்திய அரசு தமிழகத்துக்கு வழங்கியுள்ள நிதி ரூ.1,050 கோடி ஆகும். 6-ம் வகுப்பிலிருந்து, 12-ம் வகுப்பு வரை, தகவல் தொடர்பு தொழில்நுட்பம் என்பது தனிப்பாடமாக அமைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், தமிழகத்தில், அறிவியல் பாடத்தின் ஒரு பகுதியாக மட்டுமே வைக்கப்பட்டுள்ளது. இதனால், சிறு வயதிலிருந்தே, தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தில் நமது குழந்தைகள் சிறந்து விளங்க வேண்டும் என்ற இந்தத் திட்டத்தின் அடிப்படை நோக்கமே சிதைந்திருக்கிறது.

டெல்லி, தெலங்கானா, ராஜஸ்தான் உள்ளிட்ட பிற மாநிலங்களில் எல்லாம், ஆறாம் வகுப்பில் இருந்தே பாடத்திட்டத்தில் தகவல் தொடர்பு தொழில்நுட்பம் என்பது தனிப்பாடமாக அமைக்கப்பட்டுள்ளது. திமுகவின் கூட்டணிக் கட்சியான கம்யூனிஸ்டுகள் ஆட்சி செய்யும் கேரள மாநிலத்தில், தமிழ் உட்பட மும்மொழிகளில், தகவல் தொடர்பு தொழில்நுட்பக் கல்விப் பாடம் உள்ளது. குறைந்தபட்சம், கேரள மாநிலத்திடம் இருந்து, தமிழில் இருக்கும் அந்தப் பாடநூலையாவது வாங்கி, நமது ஆறாம் வகுப்பு மாணவர்களுக்குக் கொடுத்திருக்கலாம்.

கடந்த மூன்று ஆண்டுகளில், சமக்ர சிக்ஷா திட்டத்தின்கீழ், தகவல் தொடர்பு தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் செயல்பாடுகள் பாடத்திட்டத்திற்காக, மத்திய அரசு, தமிழகத்துக்கு வழங்கிய ரூ.1,050 கோடி எங்கே சென்றது? அரசு மற்றும் அரசு உதவி பெறும் எத்தனை பள்ளிகளில், தகவல் தொடர்பு தொழில்நுட்பம் ஆய்வகங்கள் செயல்பாட்டில் உள்ளது? ஏன் ஆறாம் வகுப்பிலிருந்தே, தகவல் தொடர்பு தொழில்நுட்பக் கல்வி, தனிப் பாடமாக அமைக்கப்படவில்லை? இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பொதுமக்களுக்குத் தெளிவுபடுத்தக் கடமைப்பட்டிருக்கிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE